திருவள்ளுவர்
வணக்கம்!
திருவள்ளுவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதிய திருக்குறள் இன்றளவும் மனிதனை அறநெறியில் வழிநடத்துகிறது. சாதி, மதம், பேதம் இந்த மூன்றையும் கடந்த நூலாய் திருக்குறள் உள்ளது. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என பாரதியார் வள்ளுவரை சிறப்பித்து பாடியுள்ளார். அதேபோல், “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே, புகழ் வையகமே” என பாரதிதாசன் புகழ்ந்து பாடியுள்ளார்.
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளாகக் கொண்டு, 133 அதிகாரங்களாகக் கட்டமைக்கப்பட்டு, அதிகாரத்திற்குப் பத்து குறட்பாக்கள் வீதம் மொத்தம் 1330 குறள்களை திருவள்ளுவர் இயற்றியுள்ளார். தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் எனக் கடைப்பிடிக்க ஆணையிட்டார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் சென்னையில் மிக பிரமாண்டமாக வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட்டதோடு, மேலும் அவரது புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில் முக்கடல் சந்திக்கும் குமரிக்கடலில் 133 அடி உயரத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் பிரமிப்பூட்டும் விதமாக மிக பிரமாண்டமாக திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபொழுது சென்னையில் இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றதை அனைவரும் அறிவோம். அக்காலகட்டத்தில் கல்வி அமைச்சராக இருந்த திரு.வி.ஆர்.நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் 02.01.1968 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்தமிழ்க்காவலர் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களால் அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
இச்சிலையை வடிவமைக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு திருவள்ளுவர் போல ஒப்பனையிட்டு இச்சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டது.
உலகப்பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை அளித்த அய்யன் திருவள்ளுவருக்கு அவர் பிறந்த இடமாக கருதப்படும் சென்னை, மயிலாப்பூரில் திருக்கோயில் அமைந்துள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் 21.03.2001ல் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.
தற்பொழுது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசின் சார்பில் 2023-2024ஆம் ஆண்டிற்கான இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் புனரமைப்பு செய்திட ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி செய்தித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துச் சிலைகள் மற்றும் நினைவகங்களுக்கு விரைவு துலங்கல் குறியீடு (QR Code) மூலம் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் காண வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் நிகழ்வாக சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு விரைவு துலங்கல் குறியீடு (QR Code) முறையை 02.05.2023 அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு பெ சாமிநாதன் அவர்கள் முன்னிலையில் துவைக்கி வைப்பதை செய்தித்துறை மகிழ்ச்சி கொள்கிறது.
நன்றி! வணக்கம்.