காந்தி மண்டபம்

சர்தார் வல்லபபாய் பட்டேல் சாலை, கிண்டி

வணக்கம்!

நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட தேசத்தந்தை என்றும் மகாத்மா என்றும் அனைவராலும் அன்புடன் வழங்கிப் போற்றப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் 1869ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ஆம் நாள் குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். தந்தையார் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய், இவர்தம் துணைவியார் கஸ்தூரிபாய் ஆவார்.

காந்தி, தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடித்த பிறகு இங்கிலாந்தில் 'பாரிஸ்டர்' பட்டம், சில காலம் பம்பாயில் வழக்கறிஞர் பணி, பின்னர்ப் பணி தேடி தென்னாப்பிரிக்கா பயணம். அம்மண்ணில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும், இனப்பாகுபாடும் மிகுந்து காணப்பட. அண்ணல் அங்கு எதிர்கொண்ட அனுபவங்களும், அவமானங்களுமே பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கிட உதவியது.

தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைக்காகப் போராடிய அண்ணல் காந்தியடிகள் தாய்நாடு திரும்பியதும் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் தாய்நாட்டிற்கு விடுதலையினைப் பெற்றுத் தரவேண்டும் என்பதில் உறுதி பூண்டார். 1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக அண்ணல் காந்தியடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடிமைத்தனத்திலிருந்து விடுபட ஆயுதம் ஒன்றுதான் தீர்வு என்று எண்ணி உலகமே அதன் பின் தொடர்ந்த காலத்தில், அறவழியாம் அகிம்சை வழியால் அதனைச் சாதித்திட இயலும் என்று உலகினுற்கு உணர்த்தியவர் நம் உத்தமர் காந்தியடிகள். அண்ணலின் அயராத இந்த விவேகமிக்க புதிய உத்தியைக் கண்டு உலகமே வியந்து போற்றிப் பாராட்டியது.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும், கலவரங்களும் நிகழ்வதைக் கண்டு வேதனையுற்ற அண்ணல் காந்தியடிகள் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் அயராத முயற்சியில் தன்னையே அர்ப்பணித்தார். அகிம்சை வழியாம் அறவழியிலேயே தனது போராட்டங்களை முன்னெடுத்தார். 1930இல் தண்டி யாத்திரை, உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம், 1942இல் வெள்ளையனே வெளியேறு ஆகிய போராட்டங்கள் நாட்டின் விடுதலைக்கு வித்திட்டது என்றால் அது மிகையில்லை.

சுதேசி இயக்கம், தீண்டாமை, மதுவிலக்கு மற்றும் சமூக நீதி இவற்றையே தன் லட்சியமாகக் கொண்டிருந்தார். சத்தியம், அகிம்சை இவை இரண்டையும் தம் இரு கண்கள் என்று போற்றி தம் வாழ்நாளின் இறுதிவரை விடாமல் கடைப்பிடித்தார். அண்ணலால் எழுதப்பட்ட 'சத்திய சோதனை' என்னும் தன் வரலாறு உலகப் புகழ் பெற்ற நூலாகும்.

குஜராத்தில் பிறந்து பல்வேறு இந்திய மொழிகள் பல கற்றறிந்தாலும், தமிழ்மொழி மீதும், தமிழ் மக்களின்பால் அண்ணல் கொண்டிருந்த அன்பும் நேசமும் அளவிடற்கரியது. தனது 27ஆம் வயதில் தமிழ் கற்கத் தொடங்கி மறைவெய்தும் வரை தமிழ் கற்கும் முயற்சியில் ஈடுபட்டது தமிழராகிய நம் அனைவருக்கும் பெருமை. 24.12.1933இல் நடந்த தமிழன்பர் மாநாட்டிற்காக அவர் விடுத்த செய்தியில் 'எனது தமிழ் அறிவு சொற்பமே, ஆயினும் நான் தமிழின் அழகையும் வளத்தையும் நன்கு உணர்கிறேன். தமிழை அலட்சியம் செய்வது என்பது ஒரு பெருங்குற்றம் என்பது என்னுடைய அபிப்பிராயம்' என்று தமிழ் மீதான தனது பற்றினைப் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார். 1921ஆம் ஆண்டு மதுரைக்கு அவர் வருகை தந்தபோது தனது ஆடம்பர உடைகளைத் துறந்து, விவசாயிகள் அணியும் வேட்டித் துண்டுக்குத் தன்னை மாற்றிக் கொண்டதோடு இறக்கும் வரை அதைத் தொடர்ந்தார். நம்நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட உத்தமர் காந்தியடிகள் 30.01.1948 அன்று அகால மரணத்தைத் தழுவினார்.

அண்ணலுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் காந்தி மண்டப வளாகம் 27.1.1956 அன்றும், இவ்வளாகத்தில் அண்ணல் காந்தியடிகளின் அருங்காட்சியகம் 2.10.1979 அன்றும் திறந்து வைக்கப்பட்டன.

ஆண்டுதோறும் அண்ணலின் பிறந்த அக்டோபர் திங்கள் 2ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு, சனவரித் திங்கள் 30ஆம் நாளை அன்னாரின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

நன்றி! வணக்கம்.

காந்தி மண்டபம்

நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட தேசத்தந்தை என்றும் மகாத்மா என்றும் அனைவராலும் அன்புடன் வழங்கிப் போற்றப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் 1869ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ஆம் நாள் குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். தந்தையார் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய், இவர்தம் துணைவியார் கஸ்தூரிபாய் ஆவார்.