பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம்

நாகர்கோவில்

வணக்கம்!

புரட்சிகரமான கொள்கையால், சமுதாயத் தொண்டால், இலக்கியச் சேவையால், சுதந்திரப் போராட்டத் தியாகத்தால் குமரிக்குத் தனிப்பெருமை சேர்த்த பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் 21.08.1907 அன்று பட்டன்பிள்ளை - உமையம்மை இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.

பள்ளிப் படிப்பில் வல்லவராகத் திகழ்ந்ததோடு மட்டுமின்றிக் கவிதை எழுதுவதிலும், மேடைப் பேச்சிலும் சிறந்து விளங்கினார். அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு உப்புச் சத்தியாக்கிரகம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கு பெற்றுச் சிறைத் தண்டனையும் பெற்றார். விடுதலை உணர்வை ஊட்டுகின்ற வகையில் நாடகங்களையும், தேசப்பக்திப் பாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டார். தந்தை பெரியாருடன் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றார். காந்திய வழியில் தேச விடுதலைக்குப் பாடுபடுவதும், தந்தை பெரியார் வழியில் சமூகச் சீர்திருத்ததிற்குப் போராடுவது இவ்விரண்டையும் தன் இலட்சியமாகக் கொண்டிருந்தார். தேசப்பிதா காந்தியடிகள் அவர்களால் 'நீங்கள் தான் இந்தத் தேசத்தின் சொத்து' என்று பெருமையோடு போற்றப்பட்டவர்.

தனித்தமிழ் மீது அளவற்ற பற்றுக் கொண்டு பேசுவதையும் எழுதுவதையும் வழக்கமாக்கிக் கொண்டவர். 1932ஆம் ஆண்டு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைச் சந்தித்த பின்னரே பொதுவுடைமை வழியில் மனிதகுல விடுதலைக்குப் பாடுபட்டார். 1937ஆம் ஆண்டு தினசக்தி வார இதழைத் தொடங்கினார். 1943ஆம் ஆண்டு விவசாய சங்கங்கள், இலக்கிய மன்றங்கள் மற்றும் பல்வேறு இளைஞர் அமைப்புகளை உருவாக்கித் தொழிலாளர்கள் முன்னேற்றம் காண அரும்பாடுபட்டார்.

எளிமையின் சின்னமாகவும், தாய்நாட்டின் மீது மிகுந்த பக்தி கொண்டவராகவும் வாழ்ந்த பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் அவர்கள் 18.01.1963 அன்று மறைந்தார்.

அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசின் சார்பில் மணிமண்டபம் 19.04.1998 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த ஆகஸ்ட் திங்கள் 21ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம்

புரட்சிகரமான கொள்கையால், சமுதாயத் தொண்டால், இலக்கியச் சேவையால், சுதந்திரப் போராட்டத் தியாகத்தால் குமரிக்குத் தனிப்பெருமை சேர்த்த பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் 21.08.1907 அன்று பட்டன்பிள்ளை - உமையம்மை இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.