தியாகச் சீலர் கக்கன் மணிமண்டபம்

தும்பைப்பட்டி

வணக்கம்!

தியாகச் சீலர் கக்கன் மதுரை மாவட்டம், மேலூருக்கு அருகில் உள்ள தும்பைப்பட்டி என்னும் கிராமத்தில், பூசாரி கக்கன் - குப்பி அம்மாள் இணையர்க்கு 18.06.1909 அன்று மகனாகப் பிறந்தார்.

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் தீண்டாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்த காலத்தில் அண்ணல் காந்தியடிகள் அறிவித்த தீண்டாமை ஒழிப்பு, வெள்ளையனே வெளியேறு, அன்னை மீனாட்சி ஆலய நுழைவுப் போராட்டம் உள்ளிட்ட பல அறப்போராட்டங்கள் வெற்றி பெற்றிட தன்னையே அர்ப்பணித்தவர் தியாகச் சீலர் கக்கன் ஆவார்.

கக்கன் அவர்கள் ஆற்றியுள்ள அளப்பரிய பொதுத் தொண்டுகளை அண்ணல் காந்தியடிகள் வியந்து பாராட்டியுள்ளார். 1946ஆம் ஆண்டு அரசியல் நிருணய சபை உறுப்பினராகவும், 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், 1957ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் தலைமையிலான அரசிலும், 1962ஆம் ஆண்டு பெரியவர் பக்தவத்சலம் தலைமையிலான அரசிலும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல உயர்ந்த பொறுப்புகளைக் கடமையுடனும் கடுமையான உழைப்புடனும் நேர்மையான முறையில் மக்களுக்குத் தொண்டாற்றியுள்ளார்.

கறைபடாத கரம் உடையவர், கடமையே கடவுள் எனக் கொண்டவர், காங்கிரஸ் கட்சி, காந்தியார், காமராசர் எனது மூன்று தெய்வங்கள் என்று வாழ்ந்த தியாகச் சீலர் கக்கன் அவர்கள் 23.12.1981 அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியில் தமிழக அரசின் சார்பில் தியாகச் சீலர் கக்கன் மணிமண்டபம் 13.02.2001 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த சூன் திங்கள் 18ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

தியாகச் சீலர் கக்கன் மணிமண்டபம்

தியாகச் சீலர் கக்கன் மதுரை மாவட்டம், மேலூருக்கு அருகில் உள்ள தும்பைப்பட்டி என்னும் கிராமத்தில், பூசாரி கக்கன் - குப்பி அம்மாள் இணையர்க்கு 18.06.1909 அன்று மகனாகப் பிறந்தார்.