பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபம்
பட்டுக்கோட்டை
வணக்கம்!
'மக்கள் கவிஞர்' என்று போற்றிப் புகழப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் அருணாசலம் விசாலாட்சி இணையர்க்கு 13.04.1930 அன்று மகனாகப் பிறந்தார்.
பாட்டுடை வேந்தன் மகாகவி பாரதிக்குப் பின், சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்கள் மனத்தில் வெள்ளமாய்ப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டையார் என்றால் அது மிகையில்லை. வறுமையின் காரணமாகப் பல தொழில்களில் ஈடுபட்டுப் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் மீது அதிக நாட்டம் கொண்டு இறுதியாகப் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனிடம் நல்ல தமிழ் கற்றுத் தேர்ந்தார்.
இம் மண்ணில் 29 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்தாலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வுக் கருத்துகளை மக்களிடமும் குறிப்பாக, இளைஞர்களுக்கு மட்டுமின்றிச் சிறுவர்களுக்கும் தனது கருத்துகள் சென்றடைந்திட வேண்டுமென்று விரும்பி அதற்கேற்ற எளிமையான பாடல்களைத் தந்தவர் பட்டுக்கோட்டையார். 'சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா!', 'திருடாதே பாப்பா... திருடாதே!' தூங்காதே தம்பி தூங்காதே!' உள்ளிட்ட பாடல்கள் என்றும் சாகா வரம் பெற்றவை. தத்துவம், அரசியல், காதல், நகைச்சுவை, சோகம் உள்ளிட்ட பல உணர்வுத் தளங்களில் 187 பாடல்களைப் படைத்துத் தனது 29 ஆம் வயதில் அகால மரணத்தைத் தழுவியிருந்தாலும், மனித குலம் இப்பூலகில் வாழுகின்ற காலம் வரையில் மக்கள் கவிஞரின் பாடல்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
அன்னாரின் பெருமைகளைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசால் 1993ஆம் ஆண்டு இவரது படைப்புகள் அரசுடமையாக்கப்பட்டுப் பட்டுக்கோட்டை, நாடியம்மாள்புரம், முத்துப்பேட்டைச் சாலையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மணிமண்டபம் 13.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த ஏப்ரல் திங்கள் 13ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.