கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம்

காரைக்குடி

வணக்கம்!

சாகா வரம்பெற்ற தனது பாடல்களால் தமிழ் உள்ளங்களிலெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள கவியரசு கண்ணதாசன் அவர்கள் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த சிறுகூடல்பட்டி கிராமத்தில் சாத்தப்பன்- விசாலாட்சி இணையர்க்கு 24.06.1927-இல் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் முத்தையா.

இளமைப் பருவந்தொட்டே எழுதுவதில் மிகுந்த ஆர்வமும், புத்தகங்களை வாசிப்பதில் அதீத நாட்டமும் கொண்டு, பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்து சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார். பெரும்புலவன் பாரதியைத் தனது மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்டு, இலக்கியத்தில் 10க்கும் மேற்பட்ட காப்பியங்கள், 8 சிற்றிலக்கியங்கள், பல்வேறு கவிதைத் தொகுப்புகள், கவிதை நாடகம் 25க்கும் மேற்பட்ட புதினங்கள், சிறுகதைகள் தன் வரலாறு, 27 கட்டுரைகள் அர்த்தமுள்ள சமயம் சார்ந்த இந்து மதம் தொகுப்புகள், 3 நாடகங்கள், 9 உரைநூல்கள் என எழுத்துலகிலும் தனி முத்திரை பதித்தார். அவர் எழுதிய 'சேரமான் காதலி' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

திரையுலகில் தனித்துவமிக்க தனது பாடல்களால் என்றும் முடிசூடா மன்னனாக வலம் வந்தார். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குக் கதை, வசனம், 5000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் என இறக்கும் வரையிலும் எழுதிய வண்ணம் இருந்தார்.

தொடக்கத்தில் அரசியலில் நாட்டம் கொண்டு திராவிட இயக்கத்திலும், தேசிய இயக்கத்திலும் இணைந்து பின் விலகி. 1957இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, 1961இல் ஆண்டு தமிழ்த் தேசியக் கட்சி என்ற தனிக்கட்சி கண்டதோடு தன் அரசியல் பயணத்தை முடித்துக் கொண்டார்.

1970இல் மத்திய மாநில அரசுகளின் சிறந்த பாடலாசிரியர் விருது.1978இல் அரசவைக் கவிஞர். 1979இல் சாகித்ய அகாதமி விருது. அவருடைய படைப்புகளிலேயே இயேசு காவியமும், அர்த்தமுள்ள இந்து மதமும் இன்றளவும் பேசப்படும் நூல்களாகும். கவியரசு கண்ணதாசன் 17.10.1981 அன்று காலமானலும், கணக்கில்லாக் கவிதைகளையும். கன்னித் தமிழ்ப் பாடல்களையும் தந்த கவியரசர் தமிழ் காலம் உள்ளவரை நிலைத்து நிற்பார் என்பதில் ஐயமில்லை.

அன்னாரின் நினைவைப் போற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு அரசு சார்பில் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் 21.10.1992 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த சூன் திங்கள் 24ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம்

சாகா வரம்பெற்ற தனது பாடல்களால் தமிழ் உள்ளங்களிலெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள கவியரசு கண்ணதாசன் அவர்கள் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த சிறுகூடல்பட்டி கிராமத்தில் சாத்தப்பன்- விசாலாட்சி இணையர்க்கு 24.06.1927-இல் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் முத்தையா.