வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம்
கயத்தாறு
வணக்கம்!
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரமுழக்கமிட்டும், நாட்டுக்காக நெஞ்சுறுதியுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் துாத்துக்குடி பாஞ்சாலங்குறிச்சியில் ஜெகவீர கட்டபொம்மன் மாவட்டம், ஆறுமுகத்தம்மாள் இணையர்க்கு 03.01.1760 அன்று மகனாக பிறந்தார்.
அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மனுக்கு உதவியாக இருந்த கட்டபொம்மன், 02.02.1790 அன்று 47ஆவது பாளையக்காரராகத் தமது 30ஆவது வயதில் அரியணைப் பொறுப்பேற்றார்.
நெல்லை மாவட்டக் கலெக்டராக இருந்த ஆங்கிலேய ஜாக்சன் துரை என்பவர் கட்டபொம்மனை வரிகட்டுமாறு பணித்ததைக் கண்டு வெகுண்டெழுந்த வீரபாண்டிய கட்டபொம்மன், 'தானம் கேளுங்கள் தந்து மகிழ்கிறேன் வரி கேட்பதற்கு உங்களுக்கு உரிமையும் இல்லை, கேட்டவுடன் பயந்து கொடுப்பதற்கு நாங்கள் கோழைகளும் இல்லையென்று' கர்ஜித்தார். வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும், விவேகமும் ஏனைய பிற பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனத்திலும் வீரத்தை விதைத்தது.
இதன்பொருட்டு எழுந்த பகையால், வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்திட 1797ஆம் ஆண்டு தொடங்கி 1799 வரை ஆங்கிலேயர் தொடுத்த பல போரில் தோல்வியைத் தழுவினர். சதித்திட்டம் தீட்டிப் புதுக்கோட்டையில் தங்கியிருந்து வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்து ஆங்கிலேயத் தளபதி பானர்மென் உத்தரவின்படி, வீரபாண்டிய கட்டபொம்மன் 19.10.1799 அன்று கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவைப் போற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாற்றில் தமிழ்நாடு அரசின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் 18.06.2015 அன்று திறந்து வைக்கப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சி மற்றும் கயத்தாற்றில் ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த மே 8 சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.