தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணிமண்டபம்

குன்றக்குடி

வணக்கம்!

தனது சமயப்பணியால் தமிழ்த்தொண்டால் அடிகளார் என்று அழைக்கப்பட்ட தவத்திரு குன்றக்குடி அடிகள் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறை, திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப்பிள்ளை - சொர்ணத்தம்மாள் இணையர்க்கு 11.07.1925 அன்று மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன்.

பள்ளிப் பருவத்திலே தமிழ் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாகத் திருக்குறளை விரும்பிப் படித்து அவற்றைத் தமிழ்ப் பேராசிரியர் இரா.பி.சேதுபிள்ளையிடம் ஒப்பித்துக் காலணா பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதுவே பின்னாளில் அடிகளாருக்கு பொதுநெறியானது. சைவ சமயத்தின்பால் மிகுந்த பற்று கொண்டு தருமபுர ஆதினத்தில் 1944ஆம் ஆண்டு கணக்கர் பணி, பின் 1945-1948 ஆம் ஆண்டுகளில் தமிழை முழுமையாகக் கற்று வித்துவான் ஆக உயர்ந்து, அத்திருமடத்தில் துறவு ஆட்கொண்டு கந்தசாமித் தம்பிரான் ஆக நியமனம் 1949 ஆம் ஆண்டு ஆதீன இளவரசர், 1952 ஆம் ஆண்டு திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று 45ஆவது குருமகா சன்னிதானமாக விளங்கினார்.

இடைவிடாத சமயப் பணிகளுக்கு இடையேயும், தொய்வற்ற தமது திருத்தமிழ்ப் பணியைத் தொடர்ந்த வண்ணம் இருந்தார்.

1952 ஆகஸ்ட் 11இல் பெரும் மாநாடு ஒன்றினை நடத்தி "அருள்நெறித் திருக்கூட்டம்' அமைப்பினை உருவாக்கினார். 1966ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் துணையோடு, "தமிழ்நாடு தெய்வீகப் பேரவை" என்னும் அமைப்பிற்குத் தலைமையேற்று, 1969 முதல் 1976 வரை அரும்பணிகள் பலவற்றை அடிகளார் ஆற்றியுள்ளார். தான் சார்ந்திருந்த குன்றக்குடி கிராமத்தை முன்மாதிரிக் கிராமமாக உருவாக்கினார். நாவன்மை, எழுத்திலும் வல்லமை கொண்ட அடிகளார் ஏராளமான நூல்களை எழுதியதோடு மணிமொழி, தமிழகம், அருளோசை உள்ளிட்ட இதழ்களையும் நடத்தினார்.

1986ஆம் ஆண்டு தமிழக அரசின் திருவள்ளுவர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். தொடர்ந்து 1991இல் தேசிய விருதும் பெற்றார். தந்தை பெரியார் இடத்திலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்பாலும் மிகுந்த பற்றும் நட்பும் கொண்டிருந்தார். சமயத்திற்கும், சமுதாயத்திற்கும் ஒரு பெரும் இணைப்புப் பலமாகத் திகழ்ந்தவர் என்று பாராட்டப்பட்டவர்.

அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் மணிமண்டபம் 12.03.2001 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த சூலைத் திங்கள் 11ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணிமண்டபம்

தனது சமயப்பணியால் தமிழ்த்தொண்டால் அடிகளார் என்று அழைக்கப்பட்ட தவத்திரு குன்றக்குடி அடிகள் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறை, திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப்பிள்ளை - சொர்ணத்தம்மாள் இணையர்க்கு 11.07.1925 அன்று மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன்.