மார்ஷல் நேசமணி மணிமண்டபம்
நாகர்கோவில்
வணக்கம்!
தமிழர்களின் சமூகப் பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாகக் கன்னியாகுமரியைத் தாய்த் தமிழகத்துடன் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பல போராட்டங்கள் நடத்தித் தியாகம் செய்த நேசமணி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டில் 12.06.1895 அன்று அப்பல்லோஸ் ஞானம்மாள் இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.
நாட்டிற்கு உழைத்திட சட்டக்கல்வி தேவையென்பதை உணர்ந்து, 1921ஆம் ஆண்டு சட்டம் பயின்று வழக்கறிஞராகி விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவசச் சட்டசேவை ஆற்றினார். 1945ஆம் ஆண்டு சமூகநீதிப் போராட்டத்திற்காகத் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசைத் தொடங்கி 1947ஆம் ஆண்டு நம்நாடு விடுதலை பெற்றபின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த கன்னியாகுமரியைத் தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தினை முன்னெடுத்து அதில் வெற்றி கண்டார். 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைந்தது. தொடர்ந்த தம் மக்கட்பணியில் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார். குமரித் தந்தை என்று அன்புடன் அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி அவர்கள் 01.06.1968 அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில்,கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசின் சார்பில், கட்டப்பட்ட மார்ஷல் நேசமணி மணிமண்டபம் 27.02.2014 அன்று திறந்து வைக்கப்பட்டது. அவரது பிறந்த சூன்த் திங்கள் 12ஆம் நாளை அரசு விழாவாகச் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.