கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் மணிமண்டபம்
காயிதேமில்லத் அரசினர் மகளிர் கல்லூரி அருகில்
வணக்கம்!
கண்ணியத் தென்றல் காயிதேமில்லத் அவர்கள் 05.061896 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டையில் பிறந்தார். இவரது இயற்பெயர் முகமது இஸ்மாயில் என்பதாகும்.
காயிதேமில்லத் அவர்களின் சமுதாயப்பணி அரசியலுக்கு அவரை இழுத்தது. அரசியல் வாழ்க்கையில் தம் கண்ணியத்தையும், நேர்மையையும், கடமையையும் கட்டிக் காத்துத் தேசப்பணியையும், மார்க்கப்பணியையும் தொடர்ந்தார். அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1920ஆம் ஆண்டு முதல் 16 ஆண்டுக் காலம் காங்கிரசின் பெருந்தலைவர்களுள் ஒருவராய் இருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். 1936ஆம் ஆண்டு சென்னை முஸ்லீம் லீக் கட்சிக்குத் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக, மத்திய அரசியல் நிருணய சபையின் உறுப்பினராக, மாநிலங்களவை உறுப்பினராகப் பல்வேறு உயர்ந்த பொறுப்புகளை ஏற்று மக்கட்பணி ஆற்றியுள்ளார்.
மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் உற்ற நண்பராக விளங்கிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் 05.04.1972 அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, அண்ணாசாலை அருகே கண்ணியத் தென்றல் காயிதேமில்லத் முகமது இஸ்மாயில் சாகிப் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு 25.02.2002 அன்று திறந்து வைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த சூன் திங்கள் 5ஆம் நாள் அன்னாரின் நினைவிடத்தில் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.
நன்றி! வணக்கம்.