மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மணிமண்டபம்

சாத்தமங்கலம்

வணக்கம்!

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள பெரும்புதூர் கிராமத்தில் ஞானமுத்து - பரிபூரணம் இணையர்க்கு 07.02.1902 அன்று மகனாகப் பிறந்தார்.

'யங்' துரைமகனாரின் உதவியால் கல்வி கற்றார். ஆசிரியர் பணியில் இருந்துகொண்டே 1924ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர் பட்டமும், 1926ஆம் ஆண்டு நெல்லை தென் இந்தியத் தமிழ்ச்சங்கப் புலவர் பட்டமும், சென்னை பல்கலைக்கழக வித்துவான் பட்டமும் பெற்றார்.

1944ஆம் ஆண்டு சேலம் நகராட்சிக் கல்லூரியில் 12 ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலைவராகவும், 1956ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் திராவிட மொழி ஆராய்ச்சித்துறை ஆய்வாளராகவும், 1974ஆம் ஆண்டு தமிழக அரசு தொடங்கிய 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநராகவும் திறம்பட பணியாற்றி, தந்தை பெரியார் அவர்களால் 'திராவிட மொழி நூல் ஞாயிறு' என்கிற பட்டமும், தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளார் அவர்களால் 'சொல்லாராய்ச்சியில் ஒப்பற்ற தனித்தன்மை படைத்தவர்' பாவாணர் என்று பாராட்டப்பட்டவர்.

ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, அரபு, சீனம், ஜெர்மன், வடமொழி உள்ளிட்ட 23 மொழிகளைக் கற்றறிந்த போதிலும் வடமொழி கலக்காமல் தனித்தமிழில் எழுதி, தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டு அளவிடற்கரியது. தமிழ்நாடு அரசின் சார்பில் 1979ஆம் ஆண்டு 'செந்தமிழ்ச் செல்வர்' என்று விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார். இவர் 16.01.1981 அன்று இயற்கை எய்தினார்.

பாவாணர் படைப்பில், மொழியியல் ஆய்வு, ஒப்பியல் மொழிநூல் போன்ற சொல் ஆராய்ச்சிகள் குறித்த 37 நூல்களில், இயற்றமிழ் இலக்கணம், தமிழர் சரித்திரச் சுருக்கம், திராவிடத் தாய், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், தமிழர் திருமணம், தமிழ் வரலாறு. வடமொழி வரலாறு, திருக்குறள் தமிழ் மரபுரை, தமிழர் வரலாறு ஆகியன சிறந்தவையாகும். அன்னைத் தமிழுக்குப் பாவாணர் ஆற்றியுள்ள அருந்தொண்டு தமிழுள்ளவரை நிலைத்து நிற்கும்.

அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், மதுரை மாவட்டம் சாத்தமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவிடம் 30.10.2007 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த பிப்ரவரி திங்கள் 7ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் மணிமண்டபம்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகிலுள்ள பெரும்புதூர் கிராமத்தில் ஞானமுத்து - பரிபூரணம் இணையர்க்கு 07.02.1902 அன்று மகனாகப் பிறந்தார்.