தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்
விருதுநகர்
வணக்கம்!
நம் தாய்நாடாம் தமிழகத்திற்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக் கோரி, அறவழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகச் செம்மல் சங்கரலிங்கனார் அவர்கள் விருதுநகர் அருகேயுள்ள மண்மலைமேடு கிராமத்தில் பெரிய கருப்பசாமி நாடார் - வள்ளியம்மை இணையர்க்கு 26.01.1895 அன்று மகனாகப் பிறந்தார்.
அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1917ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அண்ணல் காந்தியடிகள் இருமுறை விருதுநகருக்கு வருகை தந்தபோது உறுதுணையாய் உடனிருந்தார்.
மாதர் கடமை என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ள சங்கரலிங்கனார் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் பங்குகொண்டிருக்கிறார். 1920ஆம் ஆண்டு இராஜாஜியைச் சந்தித்து அவரது சீடராகிக் கதர் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். திருச்சியில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாதம் சிறைத் தண்டனை பெற்றார். 1951ஆம் ஆண்டு விருதுநகரில் உள்ள சூலக்கரையில் ஆசிரமம் அமைத்துச் செயற்பட்டுள்ளார்.
இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்டதைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்று, இந்திய வரலாற்றிலேயே தாம் மேற்கொண்ட கொள்கைக்காகக் காந்திய வழியில் 27.07.1956 முதல் 13.10.1956 வரை 76 நாட்கள் தொடர் உண்ணா நோன்பிருந்து 'உயிர் பெரிதன்று மானமே பெரிது' என்ற இலட்சிய முழக்கத்தோடு 13.10.1956 அன்று உயிர் நீத்தார்.
தனது இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல் சங்கரலிங்கனார் அவர்கள் தமிழக வரலாற்றில் தியாகத் தீபமாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறார்.
தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் 18.06.2015 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த சனவரித் திங்கள் 26ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.