சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் மணிமண்டபம், சுயமரியாதைச் சுடரொளி என்.ஜீவரத்தினம் மணிமண்டபம்
இராயபுரம்
வணக்கம்!
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்
சிறந்த சீர்திருத்தவாதி என்றும், தேர்ந்த பொதுவுடைமைவாதி என்றும், சிந்தனைச் சிற்பி என்றும் அனைவராலும் அன்புடன் போற்றப்படும் ம.சிங்காரவேலர் அவர்கள் 18.02.1860 அன்று சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். மிகவும் பின்தங்கிய மீனவர் சமுதாயத்தைச் சார்ந்திருந்தாலும் சிறுவயது முதற்கொண்டே கற்றறிவதிலும், அரிய பல நூல்களைத் தேடிப் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த காரணத்தினால், தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றறிந்தார். ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் அனுதினமும் அல்லல்படுவதைக் கண்டு வெகுண்டெழுந்து சட்டம் பயின்றதோடு, அவர்களின் உரிமைக்காகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது இல்லத்திலேயே 20,000க்கும் மேற்பட்ட அரிய பல புத்தகங்களைக் கொண்ட நூலகத்தையும் அமைத்திருந்தார்.
உலக அரசியலைப் பற்றிய பரந்துபட்ட ஞானமும், புரிதலும் தன்னகத்தே கொண்டு பொதுவுடைமையின்பால் ஈர்க்கப்பட்டு, சென்னைத் தொழிலாளர் சங்கத்தில் இணைந்து 1923ஆம் ஆண்டு மே முதல் தேதி செவ்வண்ணக் கொடியோடு தேசியக் கொடியை ஏற்றி வைத்துத் தொழிலாளர் தினமாகக் கொண்டாட வழிவகுத்தவர். அடிமை இருள் சூழ்ந்து கிடந்த இந்திய மண்ணில் விடுதலைச் சுடர் ஒளிவிட வேண்டும் என்ற வேட்கையுடன், பொதுவுடைமைச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணிகளுக்காகச் சிந்தனைச் சிற்பி என்று போற்றிப் புகழப்பட்டார். அடிமைப்பிடியில் இருந்து தொழிலாளர்களை மீட்டெடுக்க 'ஏழைகள் தேசம் ஏழைகளுக்கே' என்ற முழக்கத்தையும் முன் வைத்தார்.
பல்வேறு மொழிகளைக் கற்றுணர்ந்தபோதும் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டு. சென்னை மாநகராட்சி உறுப்பினராகப் பதவிப் பிரமாணத்தையும் தமிழிலேயே எடுத்துக் கொண்டார். தன் வாழ்நாள் முழுவதையும் தொழிலாளர் நலன்காக்க அர்ப்பணித்துப் போராட்டம் சிறைத் தண்டனைகளைப் பெற்றாலும், சுயமரியாதை சமதருமக்கொள்கையில் தளராத உறுதி கொண்டவராகவும் வாழ்ந்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்கள் 11.02.1946 அன்று இயற்கை எய்தினார்.
அன்னாருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை எனப் பெயர் சூட்டி, திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டு, 2006ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த பிப்ரவரி திங்கள் 18ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுயமரியாதைச் சுடரொளி என். ஜீவரத்தினம்
சுயமரியாதைச் சுடரொளி என்.ஜீவரத்தினம் அவர்கள் நடேசன் தனகோடி அம்மாளுக்கு 11.11.1911 அன்று மகனாகப் பிறந்தார்.
தம் இளம் வயது தொடங்கி மீனவர் பெரும்பான்மையாக வாழ்கின்ற இராயபுரம் பகுதியைச் சார்ந்திருந்ததால், மீனவர் சமுதாய மக்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் காண அரும்பாடுபட்டார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுத்தாற்றலும், பேச்சாற்றாலும் கொண்டு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுத் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கொள்கை உரம் கொண்ட துணிச்சலான ஆண்மகன் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் புகழப்பட்ட ஜீவரத்தினம் அவர்கள் பெருந்தலைவர் காமராசரின் தொண்டினால் ஈர்க்கப்பட்டு, தான் உருவாக்கிய மீனவர் சங்கத்துடன் காங்கிரசில் இணைந்து பணியாற்றினார். மீனவர் நலன் காத்திட தன்னையே அர்ப்பணித்தவர் 25.12.1972 அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் மற்றும் சுயமரியாதைச் சுடரொளி என்.ஜீவரத்தினம் ஆகியோருக்குச் சென்னை இராயபுரத்தில் நூலகத்துடன் கூடிய மணிமண்டபங்கள் 29.09.2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.
நன்றி! வணக்கம்.