தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம்
பாப்பாரப்பட்டி
வணக்கம்!
வீரத்துறவி என்றும், தீரமிக்க புரட்சியாளர் என்றும் மக்களால் அன்புடன் வழங்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா அவர்கள் மதுரை மாவட்டம், வத்தலக்குண்டு என்ற ஊரில் ராஜம் ஐயர், நாகலட்சுமி அம்மாள் இணையர்க்கு 04.10.1884 அன்று மகனாகப் பிறந்தார்.
இளம் வயதிலேயே நாட்டுப் பற்றும் விடுதலைக்குத் தொண்டாற்றிட வேண்டும் என்கின்ற தீராத வேட்கையையும் தன்னகத்தே கொண்டிருந்தார். இளைஞர்களிடம் விடுதலை உணர்வினை வெகுண்டெழச் செய்ததில் சிவாவின் பங்கு மகத்தானது; மாசற்றது. ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, தீவிர நீத்தார். சுதேசக் கிளர்ச்சியாளராக, பத்திரிகை ஆசிரியராக, புரட்சியாளராக, வீரத் துறவியாக, சமூக சீர்திருத்தவாதியாகப் பல தளங்களில் தன் ஆளுமையை வெளிப்படுத்தியவர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் உற்ற தோழனாய் விளங்கி, தனது அனல் பறக்கும் பேச்சாலும், தொழிலாளர்கள் சார்ந்த போராட்டங்களை முன்னின்று நடத்தியதாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் கொடுஞ்சிறைத் தண்டனைகளுக்கு ஆட்பட்டுத் தொழுநோயினைப் பரிசாகப் பெற்றவர்.
1913-இல் தொடங்கிய ஞானபானு, பிரபஞ்சமித்திரன் மற்றும் இந்திய தேசாந்திரி ஆகிய பத்திரிகைகள் வாயிலாக, நாட்டின் விடுதலை குறித்த விழிப்புணர்வுகளை விதைத்தவர். தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்த வீரத்துறவி சுப்பிரமணிய சிவா பாரதத்தாய் மீது கொண்டிருந்த தணியாத பற்றின் காரணமாக, பாரத மாதா ஆலயம் எழுப்பிட முயன்றவர் 23.07.1925 அன்று உயிர் நீத்தார்.
அன்னாரின் அருமை பெருமைகளைப் போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் 18.07.2011 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் பிறந்த அக்டோபர்த் திங்கள் 4ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
நன்றி! வணக்கம்.