சுதந்திரப் போராட்ட வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம்
கவர்ணகிரி
வணக்கம்!
வீரன் சுந்தரலிங்கம் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சி அருகே உள்ள கவர்னகிரியில் காலாடி-முத்தருளி இணையர்க்கு 16.04.1770 அன்று மகனாகப் பிறந்தார். இவரின் முழுப்பெயர் கட்டகருப்பண்ணான் சுந்தரலிங்கம் என்பதாகும்.
எதற்கும் அஞ்சாத வீரன் சுந்தரலிங்கத்தின் நேர்மையையும், வீரத்தையும், புத்திசாலித்தனத்தையும் அறிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படைத்தளபதியாக அறிவித்தார்.
யானைப்படை, குதிரைப்படை, வில்படை, வல்லயம் வளைத்தடிப்படை, கம்புப்படை, ஈட்டிப்படை, வாள்படை, ஆயுதக் கிடங்கு, வெடிமருந்துக் கிடங்கு, தானியக் கிடங்கு ஆகியவை எல்லாம் மாவீரன் சுந்தரலிங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. வீரபாண்டிய கட்டபொம்மன் பெற்ற வெற்றிக்குப் பெரிதும் துணை நின்றவர்.
1799ஆம் ஆண்டு ஆங்கிலேயருடன் வீரபாண்டிய கட்டபொம்மன் நடத்திய பெரும்போரில், 'எப்பாடு பட்டாவது மன்னனைக் காப்பேன்' என்று சூளுரைத்த மாவீரன் சுந்தரலிங்கம் மறுவேடத்தில் வெள்ளையர்களின் வெடிமருந்துக் கிடங்கிற்குள் தீப்பந்தத்துடன் பாய்ந்து 1799 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் தன் உயிரை மாய்த்துக் கொண்ட உத்தம வீரரவர். இந்திய விடுதலைப் போரில் முதன்முறையாகத் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தி வீரமரணம் எய்திய மாவீரனும் ஆவார்.
அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி கவர்னகிரியில், சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபம் 21.09.2007 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த ஏப்ரல் திங்கள் 16 ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.