தியாகி வாஞ்சிநாதன் மணிமண்டபம்
செங்கோட்டை
வணக்கம்!
நாட்டின் விடுதலைக்காக இளம் வயதிலேயே தன் உயிரைத் தந்திட்ட தியாயச் சீலராம் வீர வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் 1886ஆம் ஆண்டு ரகுபதி ஐயர் - ருக்மணி அம்மாள் இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.
கல்லூரிப் படிப்பு முடித்துத் தமிழ், ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி ஆகியவற்றில் வல்லமை பெற்றிருந்த போதிலும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையையும், ஆஷ் துரையின் கொடுஞ்செயல்களையும் கண்டு வெகுண்ட வாஞ்சிநாதன் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஒழித்திட உறுதிபூண்டார். புதுச்சேரியில் தங்கியிருந்து புரட்சியவாதி வ.வே.சு. ஐயரிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டார். 'துன்பங்களுக்கு அஞ்சாதே அவற்றைக் காதலி, மரணத்தின் முடிவைத் தழுவு' என்று இளைஞர்களைத் தட்டியெழுப்பிய விவேகானந்தரின் வரிகளுக்கு ஏற்ப, நண்பர்களை ஒருங்கிணைத்துப் பாரத மாதா சங்கத்தினைத் தென்பகுதியில் நிறுவி இளைஞர்களுக்குச் சுதந்திர வேட்கையையும் வீரத்தையும் விதைத்தார்.
தன் இலட்சியத்தை நிறைவேற்றிடும் வகையில், 1911 சூன் திங்கள் 17ஆம் நாள் மணியாச்சி புகைவண்டி நிலையத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு வீர மரணத்தைத் தழுவினார் வீர வாஞ்சிநாதன்.
அன்னாருடைய தியாகத்தைப் போற்றிப் பாராட்டுகின்ற வகையில், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மணிமண்டபம் 23.12.2013 அன்று திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த சூலைத் திங்கள் 17ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.