பட்டுக்கோட்டை அழகிரிசாமி நினைவு மண்டபம்
சின்ன காஞ்சிபுரம்
வணக்கம்!
அஞ்சாநெஞ்சன் என்றும், சுயமரியாதைச் சுடர் என்றும் போற்றப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரிசாமி, தஞ்சாவூர் மாவட்டம், கருக்காக்குறிச்சியில் வாசுதேவன் கண்ணம்மா இணையர்க்கு 23.06.1900 அன்று மகனாகப் பிறந்தார்.
பள்ளிப்படிப்பை முடித்தவுடன் இராணுவத்தில்பணியாற்றிடவேண்டும் என்ற ஆர்வத்தில் 6 ஆண்டுகள் இராணுவத்திலே பணியாற்றினார். பின்னர் எழுத்தாளராகத் தனது பணியைத் தொடங்கி, தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுத் திராவிட இயக்கத்தில் இணைந்து பட்டுக்கோட்டையில் பகுத்தறிவாளர் சங்கத்தினைத் தொடங்கி சமுதாயப் பணிகளை மேற்கொண்டார். 1939ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் நடந்தபோது பெரும்படை ஒன்றினை அணிவகுத்து அழைத்துச் சென்றார்.
சுயமரியாதை இயக்கத்தின் தனிப்பெரும் தளபதியாக, சீர்திருத்தவாதியாக, மூட நம்பிக்கைகளையும், சாதிய ஏற்றத்தாழ்வு களையும் கண்டித்து அடிமைப்பட்டிருந்த மக்களை எழுச்சியுறச் செய்த புரட்சிவாதியாக, மேடையில் சிங்கமென முழங்கும் ஆற்றல் மிக்க பேச்சாளராகத் திகழ்ந்தார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரால் அஞ்சாநெஞ்சன் அழகிரி என்று அழைக்கப்பட்டவர் 28.03.1949 அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அழகிரிசாமி நினைவு மண்டபம் 29.11.2017 அன்று திறந்து வைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த சூன் திங்கள் 23ஆம் நாளை அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.