வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபம்
கட்டாரங்குளம்
வணக்கம்!
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 11.07.1710 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்தார். இவர்தம் தந்தை முத்துக்கோன். தாயார் பாக்கியத்தாய் அம்மாள் ஆவர்.
இந்தியத் திருநாட்டின் முதல் விடுதலைப் போர் 1857ஆம் ஆண்டு என அறியப்படுவதற்கு முன்பே, 1726 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் பாளையக்காரருடன் நடத்திய போரில் வெற்றி பெற்றார். 1755 மற்றும் 1756 ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களிடம் வரிவசூலிப்பதை எதிர்த்து விடுதலை உணர்வு நிரம்பப் பெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் கடுமையாக எதிர்த்தார். அதன் விளைவாக ஆங்கிலேயரின் கான்சாகிப் தலைமையில் நடைபெற்ற போரில் எட்டயபுரம் மன்னரைக் காப்பாற்றிப் பாதுகாத்தார்.
எட்டயபுரத்தை மீட்டெடுக்க விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் படை திரட்டி உரிய மாவேலி ஓடை பெத்தநாயக்கனூர் பகுதியிலிருந்து வீரர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்து, மன்னர் வெங்கடேஸ்வர எட்டப்பரும், விடுதலை வீரர் அழகுமுத்துக்கோனும் போரில் ஈடுபட்டனர். போரில் வெல்லமுடியாது என்பதை உணர்ந்து இரவு நேரத்தில் உறக்கத்திலிருந்த வீரன் அழகுமுத்துக்கோன் படையினரைத் தாக்கி 200க்கும் மேற்பட்ட வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். மன்னிப்புக் கேட்டால் உயிர்ப் பிச்சை தருவதாக எக்களாமிட்ட ஆங்கிலேயரிடம், 'அடிமைப்பட்டு உயிர் வாழ்வதைவிட சுதந்திர மனிதனாய் உயிர் விடுவோம்' என்று விடுதலை உணர்வு பொங்கிட கம்பீரமாய்க் கர்ஜித்த மாவீரர் அழகுமுத்துக்கோன் உள்ளிட்ட பலரும் 1759ஆம் ஆண்டு பீரங்கி வாயில் கட்டப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
அன்னாரின் நினைவினைப் போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், விடுதலைப் போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள திருவுருவச்சிலை 15.03.1996 அன்றும், அவர் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கட்டாலங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் 08.12.2014 அன்றும் திறந்து வைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த சூலைத் திங்கள் 11ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.