பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம்

சின்ன காஞ்சிபுரம்

வணக்கம்!

தன்னுடைய அறிவால், ஆற்றல் மிகுந்த பேச்சால், அன்புசெறிந்த அரவணைப்பால், தலைமைப் பண்பால் தமிழர்களைப் பெரிதும் ஈர்த்திட்ட அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் நடராஜர் - பங்காரு அம்மாள் இணையர்க்கு மகனாக 15.09.1909 அன்று பிறந்தார்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா என்னும் மூன்றெழுத்து மந்திரச் சொல் உச்சரித்திடும் போதினிலெல்லாம் புதிய சக்தியொன்று பிறந்திடும் நம் உயிர் நெஞ்சினிலே என்று எண்ணி வியக்கச் செய்தவர். எளிய குடும்பத்திலே பிறந்து நல்ல மாணவராக, ஆற்றல்மிகு பேச்சாளராக, அடுக்குமொழி வித்தகராக, சிறந்த எழுத்தாளராக, நல்ல நூலாசிரியராக, நாடக ஆசிரியராக, பண்பட்ட அரசியல்வாதியாகப் பன்முகத் தன்மை கொண்டு, பண்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.

இளைஞர்களின் ஒருமித்த எழுச்சியினை ஈர்த்திட்ட அவர் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்கின்ற புதிய மந்திரத்தை மக்களின் மனங்களிலே விதைத்தவர். அரசியலில் குடும்பப் பாச உணர்வினையூட்டி, மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த மாபெரும் ஜனநாயகத் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா என்றால் அது மிகையில்லை.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களையே தன் தலைவராகக் கொண்ட பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் ஆட்சிக் காலம் குறுகியதேயானாலும், அடித்தள மக்கள் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்லபல திட்டங்களைத் தந்திட்டவர். தாய்மொழியாம் நம் அன்னைத் தமிழின்பால் கொண்டிருந்த தணியாத தாகத்தினால் 'சென்னை மாகாணம் என்று வழங்கப்பட்ட நமது மாநிலத்தைத் 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணச் சட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுப் பேருந்துகள் நாட்டுடைமையாக்கம், கல்வியில் தமிழுக்கு முதலிடம், உலகத் தமிழ் மாநாடு, இருமொழிக் கொள்கை. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று இந்தியாவிற்கே தமிழகத்தை முன்னோடி மாநிலமாய்த் திகழ்ந்திட முனைப்புடன் பணியாற்றினார்.

1967ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் புனித ஜார்ஜ் கோட்டையில் 'தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகம்' என மாற்றம், அரசு முத்திரை கோபுரச் சின்னத்திலிருந்த 'கவர்மெண்ட் ஆப் மெட்ராஸ்' என்ற ஆங்கில வாக்கியம் நீக்கப்பட்டுத் தமிழ்நாடு அரசு என்று மாற்றியதோடு, அம்முத்திரையில் 'சத்யமேவ ஜெயதே' என்ற வடமொழி வாக்கியம் நீக்கப்பட்டு 'வாய்மையே வெல்லும்' என அழகுத் தமிழில் மாற்றியமைத்தார்.

'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்றுரைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் 03.02.1968 அன்று மரணத்தைத் தழுவினார். அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் இலட்சக் கணக்கில் பொதுமக்கள் பங்கேற்று உலகச் சாதனைப் படைத்தது வரலாறு.

தமிழக அரசின் சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு 16.9.1980 அன்று திறந்து வைக்கப்பட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர்த் திங்கள் 15ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம்

தன்னுடைய அறிவால், ஆற்றல் மிகுந்த பேச்சால், அன்புசெறிந்த அரவணைப்பால், தலைமைப் பண்பால் தமிழர்களைப் பெரிதும் ஈர்த்திட்ட அறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் நடராஜர் - பங்காரு அம்மாள் இணையர்க்கு மகனாக 15.09.1909 அன்று பிறந்தார்.