வள்ளல் அதியமான் கோட்டம், அதியமான் கோட்டை
நல்லம்பள்ளி
வணக்கம்!
அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்கக் காலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். இவரின் வாழ்ந்த காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது.
அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருள்களாக உள்ளன. திண்மையான உடல்வலிமை பொருந்தியவன். சேரன், சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன், இவனது அரண்மனை இல்லையென்று வருவோருக்கு அடையாத வாயிலைக் கொண்டது, இவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையுடையது என்று போற்றப்படுகிறது.
தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக் கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்துத் தன் கொடையால் உயர்ந்தவன். வள்ளல் அதியமான் நினைவினைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டைக் கிராமத்தில் வள்ளல் அதியமான் கோட்டம் அமைக்கப்பட்டு, 28.02.2009 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதியமான் கோட்டத்தில் உள்ள அதியமானின் திருவுருவச் சிலைக்கு ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமி தினத்தன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.