மகாகவி பாரதியார் நினைவு இல்லம்
துளசிங்கப் பெருமாள் கோவில் தெரு, திருவல்லிக்கேணி
வணக்கம்!
பாட்டுடைத் தலைவன் மகாகவி பாரதியார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாள் இணையர்க்கு 11.12.1882 அன்று மகனாகப் பிறந்தார்.
'கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன். அவனே கவி. நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்' - பாரதி.
உணர்ச்சிமிகு தமது கவிதைகள் மூலம் தமிழ்ப் பற்றையும், தேசப் பற்றையும் மக்களின் மனங்களில் விதைத்தவர் மகாகவி பாரதியார். எந்நிலையிலும் தன்னிலை தாழாமல், தளராமல் உறுதிமிக்க நெஞ்சுரத்துடன் வலம்வந்த பாரதி சுதேசமித்திரன், இந்திய சக்கரவர்த்தினி. பால பாரதம். சூரியோதயம், கர்மயோகி போன்ற பத்திரிகைகள் வாயிலாக பெண் விடுதலை. குழந்தைத் திருமண எதிர்ப்புப் போன்ற அனல் தெறிக்கும் கவிதைகளாலும், கட்டுரைகளாலும் நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். தாய்மொழித் தமிழைத் தெய்வமாகப் போற்றியவர். 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று கருவத்தோடும் கம்பீரத்தோடும் தமிழின் பெருமையை உலகினுக்குப் பறைசாற்றியவர்.
நாட்டு மக்களிடையே சுதந்திர வேட்கையை விதைத்திட 1905ஆம் ஆண்டு அரசியலில் பங்கேற்று, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற கூட்டங்களில் வீர உரையாற்றிப் பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார். 1908 முதல் 1918 வரை புதுச்சேரியில் தங்கிப் பாஞ்சாலி சபதம், ஞானரதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டுப் போன்ற கவிதைகளையும் காவியங்களையும் படைத்தார். அண்ணல் காந்தியடிகளின் எளிமையான தூய்மையான வாழ்க்கை முறையினாலும், கொள்கைகளினாலும் ஈர்க்கப்பட்டு, 'வாழ்க நீ எம்மான் - மகாத்மா நீ வாழ்க' என்று புகழ்ந்து பாடினார்.
பாட்டுச் சூரியன் என்றும், காலத்தை வென்ற கவிஞன் என்றும், மிகச் சிறந்த தேசப் பக்தர் என்றும் போற்றிப் புகழப்பட்ட பெரும்புலவர் பாரதியார் 11.09.1921 அன்று சென்னையில் இயற்கை எய்தினார்.
அன்னாரின் நினைவாக சென்னை, திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தினைத் தமிழ்நாடு அரசின் சார்பில் 31.12.1991 அன்று அரசுடைமையாக்கப்பட்டு 02.10.1993 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த நாளான திசம்பர் திங்கள் 11ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பாரதியாரின் நூற்றாண்டு நினைவினைப் போற்றும் வகையில், அன்னாரின் மறைந்த நாளான செப்டம்பர் 12ஆம் நாளை அரசின் சார்பில் 'மகாகவி நாளாக" அனுசரிக்கப்படுகிறது. மேலும் அன்னாருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.09.2021 அன்று வெளியிட்ட 14 அறிவிப்புகளில் குறிப்பாக, பாரதி இளம் கவிஞர் விருது, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் கட்டுரைகள், மனத்தில் உறுதிவேண்டும் புத்தகமாக வெளியிடுதல், காசியில் அவர் வாழ்ந்த வீடு அரசின் சார்பில் பராமரித்திட நிதியுதவி, படைப்புகள் குறும்படங்களாகவும் நாடகங்களாகவும் வெளியிடுதல், சென்னை பாரதியார் இல்லத்தில் ஓராண்டு தொடர் நிகழ்ச்சி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
நன்றி! வணக்கம்.