மகாகவி பாரதியார் இல்லம்

எட்டயபுரம்

வணக்கம்!

பாட்டுடைத் தலைவன் மகாகவி பாரதியார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாள் இணையர்க்கு மகனாக 11.12.1882 இல் பிறந்தார்.

'கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி. நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்' என்றுரைத்தவர் பெரும்புலவன் பாரதி.

உணர்ச்சிமிகு தமது கவிதைகள் மூலம் தமிழ்ப்பற்றையும், தேசப் பற்றையும் மக்களின் மனங்களில் விதைத்தவர் மகாகவி பாரதியார். எந்நிலையிலும் தன்னிலை தாழாமல், தளராமல் உறுதிமிக்க நெஞ்சுரத்துடன் வலம்வந்த பாரதி சுதேசமித்திரன், இந்திய சக்கரவர்த்தினி, பால பாரதம், சூரியோதயம், கர்மயோகி போன்ற பத்திரிகைகள் வாயிலாகப் பெண் விடுதலை. குழந்தைத் திருமண எதிர்ப்புப் போன்ற அனல் தெறிக்கும் கவிதைகளாலும், கட்டுரைகளாலும் நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். தாய்மொழித் தமிழைத் தெய்வமாகப் போற்றியவர். 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று கருவத்தோடும் கம்பீரத்தோடும் தமிழின் பெருமையை உலகினிற்குப் பறைசாற்றியவர்.

நாட்டு மக்களிடையே சுதந்திர வேட்கையை விதைத்திட 1905ஆம் ஆண்டு அரசியலில் பங்கேற்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற கூட்டங்களில் வீர உரையாற்றிப் பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார். 1908ஆம் ஆண்டு தொடங்கி 1918 வரையில் புதுச்சேரியில் தங்கி பாஞ்சாலி சபதம், ஞானரதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு போன்ற கவிதைகளையும் காப்பியங்களையும் படைத்தார். அண்ணல் காந்தியடிகளின் எளிமையான தூய்மையான வாழ்க்கை முறையினாலும், கொள்கைகளினாலும் ஈர்க்கப்பட்டு 'வாழ்க நீ எம்மான்- மகாத்மா நீ வாழ்க' என்று புகழ்ந்து பாடினார்.

பாட்டுச் சூரியன் என்றும் காலத்தை வென்ற கவிஞன் என்றும் போற்றிப் புகழப்பட்ட பெரும்புலவன் சுப்பிரமணிய பாரதியார் 11.09.1921 அன்று சென்னையில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் நினைவாகத் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அவர் பிறந்த இல்லம் தமிழ்நாடு அரசின் சார்பில் 12.05.1973 அன்று அரசுடையாக்கப்பட்டு நினைவு இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த திசம்பர்த் திங்கள் 11ஆம் நாளை அரசு விழாவாகவும், நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாளை மகாகவி நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

மகாகவி பாரதியார் இல்லம்

பாட்டுடைத் தலைவன் மகாகவி பாரதியார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாள் இணையர்க்கு மகனாக 11.12.1882 இல் பிறந்தார்.