கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் இல்லம்
ஓட்டப்பிடாரம்
வணக்கம்!
தாய்நாட்டின் விடுதலைக்காகத் தனது சொத்து சுகங்களையும், சொந்த பந்தங்களையும் இழந்து, இரட்டை ஆயுள் தண்டனையான தீவாந்திர சிறைத் தண்டனையை அனுபவித்துச் செக்கிழுத்த தியாகச் செம்மலாம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை- பரமாயி அம்மையார் இணையர்க்கு 02.09.1872 அன்று மகனாகப் பிறந்தார்.
அடிப்படைக் கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியைத் தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895ஆம் ஆண்டு வழக்கறிஞரானார்.
சென்னையில், விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சியின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பின்னரே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனத்தைப் பறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக அரும்பாடுபட்டார். ஆங்கிலேயரின் ஆதிக்கத்தினை அரசியல் ரீதியாக மட்டுமின்றி, வணிக ரீதியாக வீழ்த்திடும் நோக்கத்தில் 'சுதேசி நேவிகேஷன் கம்பெனி' என்கின்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய காரணத்தினாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார்.
தியாகச் செம்மலின் வீரம் செறிந்த சொற்பொழிவுகளையும், தொடர் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளையும் கண்டு அதிர்ந்த ஆங்கிலேய அரசு அன்னாருக்கு மிகவும் கொடிய தீவாந்திர தண்டனையான இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, 1908ஆம் ஆண்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுச் செக்கிழுக்க வைக்கப்பட்டார்.
செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து தன் சொத்து சுகம் உள்ளிட்ட அனைத்தையும் நாட்டு மக்களுக்காக இழந்த நிலையிலும், தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அவர் கொண்டிருந்த தணியாத தாகத்தின் காரணமாகப் பல அரிய நூல்களையும் சுயசரிதத்தையையும் கவிதை வடிவில் எழுதிய தீரர் அவர். தமிழக மக்களால் பெரிதும் போற்றப்பட்ட தியாகச் செம்மல் 18.11.1936 அன்று உயிர்நீத்தார்.
அன்னாரின் நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், ஒட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த வீடு 07.08.1957 ஆம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டு, நினைவு இல்லமாகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் 23.06.2005 அன்று மணிமண்டபமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவைச் சிறையில் அவர் இழுத்த இரண்டு செக்குகளில் ஒன்று கோவையிலும், மற்றொன்று சென்னை காந்தி மண்டப வளாகத்திலும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் செப்டம்பர்த் திங்கள் 5 ஆம் நாள் பிறந்த நாள் விழாவும், அன்னாரின் நினைவு நாளான நவம்பர் 18ஆம் நாள் தியாகத் திருநாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
கப்பலோட்டிய தமிழனுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், 1972ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா, அஞ்சல் தலை, தூத்துக்குடி துறைமுகத்திற்கு அன்னாரின் திருப்பெயர், 1998ஆம் ஆண்டு அன்னாரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. மேலும் அன்னாரின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 03.09.2021 அன்று வெளியிட்ட 14 அறிவிப்புகளான தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னையில் திருவுருவச் சிலை, அன்னாரின் அனைத்து நூல்களும் குறைந்த விலையில் மறுபதிப்பு. வாழ்க்கை வரலாறு குறித்த ஒலி, ஒளிக்கண்காட்சி, படித்த பள்ளி மறுநிர்மாணம். கப்பல் துறையில் பணியாற்றுவோருக்கு விருது உள்ளிட்ட அறிவிப்புகள் யாவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நன்றி! வணக்கம்.