மனுநீதிச் சோழன் நினைவு மண்டபம்
திருவாரூர்
வணக்கம்!
ஆன்மீகத்திற்குப் பெயர் பெற்ற ஆரூராம் திருவாரூரை ஆட்சி புரிந்த மன்னன் மனுநீதிச் சோழன் நீதிநெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். உலகினுக்கே நீதியைக் கற்றுத் தந்த தமிழினத்தின் வழிவந்த மன்னர் மனுநீதிச் சோழன் தம் மக்களின் குறைகளை மன்னரிடம் தெரிவிப்பதற்காக அரண்மனை வாயிலில் ஆராய்ச்சி மணியை அமைத்திருந்தார்.
ஆராய்ச்சி மணியை ஒலித்து மக்கள் தமக்கு நீதி வேண்டுமாய் மன்னனிடம் முறையிடுவார்கள். ஆராய்ச்சி மணி ஒலித்ததும் அரசவையைக் கூட்டி விசாரணை செய்து பாதிக்கப்பட்டடோருக்கு நீதி வழங்கிடும் முறையினைப் பின்பற்றி வந்தார்.
மன்னர்கள், இளவரசர்கள் அரச குடும்பத்தை சார்ந்தவர்கள் தேரில் செல்வதற்கென்றே சோழ தேசத்தில் இருந்த ராஜ வீதியில் மனுநீதிச் சோழனின் மகன் தேரில் சென்ற போது பயமறியாத இளம் கன்று ஒன்று தேர்ச் சக்கரத்தில் இடறி விழுந்து உயிர் நீத்தது. இளம் கன்று இறந்து போனதைத் தாங்கிக் கொள்ள முடியாத தாய்ப்பசு, தன் கன்றை இளவரசன் கொன்றதற்காக நீதி கேட்டு அரண்மனை வாயிலில் அமைக்கப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை ஒலித்தது.
விவரங்களை அறிந்து அதிர்ந்த மனுநீதிச் சோழன், அரச குடும்பத்தினர் செல்லும் ராஜ வீதியில் கன்று வந்தது கன்றின் தவறே என்ற போதிலும், கன்றை இழந்த பசுவிற்கு நீதி வழங்கும் பொருட்டு, இறந்த கன்றை உயிர்ப்பிக்க முடியாது என்பதால் அந்தப் பசுவின் துயரம் தனக்கும் ஆகுக எனக் கூறித் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றார்.
குடிமக்களின் நலனறிந்து, மாட்சிமை பொருந்திய ஆட்சி செய்த மனுநீதிச்சோழன் விலங்குக்கும் நீதி வழங்கினார். அறத்தையும் அரசாட்சியை மேற்கொள்ளும் விதத்தையும் உலகுக்கு அளித்தவர் மனுநீதிச் சோழன் ஆவார்.
திருவாரூர் நகரில் தியாகராஜர் சுவாமி ஆலயத்தின் அருகில் தமிழ்நாடு அரசின் சார்பில் மனுநீதிச் சோழன் நினைவு மண்டபம் 07.03.2017 அன்று திறந்து வைக்கப்பட்டது.
நன்றி! வணக்கம்.