பெருந்தலைவர் காமராசர் நினைவகம்

சர்தார் வல்லபபாய் பட்டேல் சாலை, கிண்டி

வணக்கம்!

வாய்மை, தூய்மை, நேர்மை இம் மூன்றுக்கும் இலக்கணமாய்த் திகழ்ந்த கருமவீரர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி அம்மையார் இணையர்க்கு 15.07.1903ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.

ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தை எதிர்த்து அண்ணல் காந்தியடிகள் அறிவித்த அறப்போரில் பங்கேற்று ஏறத்தாழ 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை எதிர்கொண்ட விடுதலைப் போராட்ட வீரர் அவர். தீரன் சத்தியமூர்த்தியைத் தன் குருவாக ஏற்று, நாட்டுக்காக உழைப்பதே தனது இலட்சியம் என உறுதிபூண்டு, நாட்டுமக்களின் நலன் காத்திட இறுதிவரை துறவியாகவே வாழ்ந்தார்.

தன் அயராத உழைப்பினால் கட்சியிலும் ஆட்சியிலும் உச்சம் தொட்டார். 9 ஆண்டுக் கால ஆட்சிப் பணியில், மக்களின் முதல்வராய் 'யாசித்தேனும் பிள்ளைகளைப் படிக்க வைப்பேன் என்றுரைத்து, பள்ளிகளில் மதிய உணவிட்டு மாணவர்களின் கல்விக் கண் திறந்த கருமவீரர் அவர். தன் ஆட்சியில் தமிழகம் கல்வி, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டுமென்பதில் முனைப்புடன் செயல்பட்டு, திட்டங்களைத் திறம்பட செயலாற்றினார்.

இந்திய அளவில் கட்சியிலும் ஆட்சியிலும் உயர்ந்த பதவிகள் இவரைத் தேடி வந்த போதிலும் அதனை ஏற்க மறுத்துத், தமிழ்நாட்டு மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்தார். இறக்கும் வரையிலும் எளிமையின் சின்னமாகவும், மக்களின் நலன்குறித்துச் சிந்தித்து வாழ்ந்த, பெருந்தலைவர் காமராசர் 02.08.1975 அன்று மறைந்தார்.

அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், தமிழக அரசின் சார்பில், விருதுநகரில் 15.01.1975 அன்று முதல் அவர் வாழ்ந்த இல்லமும், சென்னைத் தியாகராயர் நகர், திருமலை சாலையில் 21.06.1978 அன்று முதல் அவர் வாழ்ந்த இல்லமும் நினைவு இல்லங்களாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரின் நினைவிடம் சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டு 14.02.1976 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த சூலைத் திங்கள் 15ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

பெருந்தலைவர் காமராசர் நினைவகம்

வாய்மை, தூய்மை, நேர்மை இம் மூன்றுக்கும் இலக்கணமாய்த் திகழ்ந்த கருமவீரர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி அம்மையார் இணையர்க்கு 15.07.1903ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.