மருதுபாண்டியர் நினைவு மண்டபம்

திருப்பத்தூர்

வணக்கம்!

விருதுநகர் மாவட்டம், நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 15.12.1748 அன்று பெரியமருது பிறந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1753இல் சின்ன மருதுபாண்டி பிறந்தார்.

மருது சகோதரர்கள் போர்க்கலைகள் அனைத்தையும் மதி நுட்பத்துடன் கற்றுத் தேர்ந்ததைக் கண்டு, மன்னர் முத்து விஜயரகுநாத சேதுபதி இவர்களுக்குப் பாண்டியர் என்ற பட்டத்தை வழங்கி, அன்று முதல் மருது பாண்டியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் ஆட்சி மத ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கியது. இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர்.

1772ஆம் ஆண்டு ஹைதர் அலி படையின் உதவியுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்று அரசி வேலுநாச்சியாரைக் காப்பாற்றினர். அவரின் மறைவுக்குப் பிறகு சிவகங்கைச் சீமையின் ஆட்சிப் பொறுப்பேற்றனர். ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன், ஊமைத்துரை மற்றும் பல குறுநில மன்னர்களின் உதவியோடு படைகளை ஒன்று திரட்டி 1801 சூன் 16ஆம் தேதி சின்னமருது வெளியிட்ட அறிக்கை ஜம்புத்தீவுப் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது.

இளையவரான சின்னமருது அரசியல் ராஜதந்திரம் மிக்கவராக விளங்கினார். மருது சகோதரர்களைப் போரில் வீழ்த்திட பாளையக்காரர்கள் பலமுறை முயன்றும் பலனின்றிப் போனது. மருது சகோதரர்களின் மதிநுட்பம் வாய்ந்த போர்த் திறமையால் பாளையக்காரர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தனர். போரினால் மருது சகோதரர்களை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயரை சதித் திட்டம் தீட்டி, மருது சகோதரர்கள் சரண் அடையாவிட்டால் காளையார்கோவில் இடித்துத் தள்ளப்படும் என ஆங்கிலேயரால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

1801ஆம் ஆண்டு மருது சகோதரர்கள் தங்களின் உயிருக்கு நிகராய் மதித்துப் போற்றிக் கட்டப்பட்ட புகழ்மிக்க காளையார்கோவில் தகர்க்கப்படுவதை விரும்பாமல், தாமாகவே முன் வந்து சரண் அடைந்தனர். பின்னர் 1801ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 24ஆம் நாள் ஆங்கிலேயரால் திருப்பத்தூர் கோட்டையில் மருதுபாண்டியர் சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மருதுபாண்டியர் நினைவிடம் 21.10.1992 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர்த் திங்கள் 24ஆம் நாளை மருதுபாண்டியர்கள் நினைவு நாளாக அரசின் சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது.

நன்றி! வணக்கம்.

மருதுபாண்டியர் நினைவு மண்டபம்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 15.12.1748 அன்று பெரியமருது பிறந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1753இல் சின்ன மருதுபாண்டி பிறந்தார்.