பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் மற்றும் அருங்காட்சியகம்
மெரினா கடற்கரை, காமராசர் சாலை
வணக்கம்!
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் எம்.கோபாலகிருஷ்ண மேனன் - சத்தியபாமா இணையர்க்கு இலங்கையில் உள்ள கண்டியில் 17.01.1917 அன்று மகனாகப் பிறந்தார்.
தனது சிறுவயது முதற்கொண்டு, நாடகத்தில் நடித்துப் பெற்ற அனுபவத்தின் பயனாக, 1936ஆம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்து தொடர்ந்து 30 ஆண்டுகள் தமிழ்த்திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது. தொடக்கத்தில் காந்தியவாதியாகத் திகழ்ந்தாலும் தந்தை பெரியார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆகியோரின் திராவிடச் சிந்தனையாலும் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபட்டார். சட்டமன்ற மேலவை உறுப்பினராக, சிறுசேமிப்புத் திட்டத் துணைத் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராகத் தன் அரசியல் வாழ்வில் படிப்படியாக உயர்ந்து 1977ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
10 ஆண்டுகள் மூன்று முறை தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் ஏழை எளியோர் நலன்பெறுகின்ற வகையில், நல்லபல திட்டங்களைச் செயற்படுத்தினார். குறிப்பாகச் சத்துணவுத் திட்டம், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசச் சீருடை, காலணி மற்றும் பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவச வேட்டி, சேலை, உலகத் தமிழ் மாநாடு, சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
நாட்டு மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்கள் 24.12.1987 அன்று இயற்கை எய்தினார்.
அன்னாருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில் 1988ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டு, 1990ஆம் ஆண்டு அஞ்சல் தலையும் வெளியிட்டது.
அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவிடம் 24.12.1992 அன்று திறந்து வைக்கப்பட்டது. அந்நினைவிடத்தில், எம்.ஜி.ஆர். அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு 30.03.2007 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த சனவரித் திங்கள் 17ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.