சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு மண்டபம்
இடலாக்குடி, நாகர்கோவில்
வணக்கம்!
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், இடலாக்குடியில் 31.07.1874 அன்று பக்கீர் மீரான் உம்மாள் ஆமினா இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.
இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்த செய்குத்தம்பி, இனிய கவிதைகளைப் பிழையின்றிப் புனையும் வல்லமை பெற்றவர். இளம் வயதிலேயே கவிபாடும் திறன் இருந்தமையால், பாவலர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
1907ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 10ஆம் நாள் சென்னை விக்டோரியா மண்டபத்தில் கண்ணபிரான் முதலியார் தலைமையில் நடைபெற்ற 100 செயல்களைக் கொண்ட சதாவதான நிகழ்ச்சியில் சதாவதானம் செய்து சாதனை படைத்ததால் சதாவதானி என்று போற்றப்படுகிறார்.
நாஞ்சில் வளநாட்டில் தேசிய விடுதலை உணர்வினை ஊட்டும் பணியோடு, தீண்டாமை ஒழிப்பு, கதர் பிரச்சாரம் போன்ற இயக்கங்களில் டாக்டர் எம்.இ. நாயுடு அவர்களின் தோளோடு தோளாகத் துணை நின்றார். தன் வாழ்நாளின் இறுதிவரையில் கதராடையை மட்டுமே அணிந்து வந்தார். சீறாப்புராணத்திற்கு உரை எழுதினார். யதார்த்தவாதி, இஸ்லாமிய மித்திரன் போன்ற இதழ்களையும் நடத்தி வந்தவர் 13.02.1950 அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரது நினைவினைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், இடலாக்குடியில் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு மண்டபம் 29.04.1987அன்று திறந்து வைக்கப்பட்டு, அன்னாரின் பிறந்த சூலைத் திங்கள் 31ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.