பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லம்

விளாச்சேரி

வணக்கம்!

தமிழ்மீது கொண்ட தீராத பற்றின் காரணமாக, வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று அழகுத் தமிழில் மாற்றியமைத்துக் கொண்டார். இவர் மதுரை மாவட்டம் விளாச்சேரியில் கோவிந்தசிவனார் இலட்சுமி அம்மையார் இணையர்க்கு 06.07.1870 அன்று மகனாகப் பிறந்தார்.

அன்னியரின் அடிமைக்கு ஆட்பட்டிருந்த காலத்தில் சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களையும் நன்கு பயின்று தமிழில் முதன்மை பெற்றுத் தங்கப் பதக்கமும் பெற்றார். தமிழ் மீது கொண்டிருந்த தணியாத பற்றின் காரணமாக, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 1893ஆம் ஆண்டு உதவித் தமிழ் ஆசிரியராகவும் பின்னர்த் தலைமைத் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

பன்னிரு இயற்றமிழ் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்து நூல்களை எழுதச் செய்தவர். அறிவியல் அடிப்படையில் தமிழ் மொழியின் வரலாறு எழுதியவர். ஞானபோதினி என்னும் மாத இதழின் இதழாசிரியர். பல்கலைக் கழகப் பட்டப் படிப்புப் பாடத்திலிருந்து தமிழ் நீக்கப்பட்டதை எதிர்த்துப் போராடி அதை மீண்டும் சேர்த்தவர். நான்காவது தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவப் பெரும் முயற்சி எடுத்தவர். தாம் வாழ்ந்த 33 ஆண்டுகளுக்குள் 74 நூல்களைப் பதிப்பித்து, முத்தமிழுக்காக 12 நூல்களை எழுதிப், பதிப்பாசிரியர், நடிகர், ஆய்வாளர், முன்னோடி என்ற பன்முகம் கொண்ட இவர் காசநோயால் பாதிக்கப்பட்டு 02.11.1903 அன்று மறைந்தார்.

அன்னாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், மதுரை மாவட்டம் விளாச்சேரி கிராமத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லம் ஆக்கப்பட்டு 31.10.2007 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த சூலைத் திங்கள் 6ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

பரிதிமாற் கலைஞர் நினைவு இல்லம்

தமிழ்மீது கொண்ட தீராத பற்றின் காரணமாக, வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று அழகுத் தமிழில் மாற்றியமைத்துக் கொண்டார். இவர் மதுரை மாவட்டம் விளாச்சேரியில் கோவிந்தசிவனார் இலட்சுமி அம்மையார் இணையர்க்கு 06.07.1870 அன்று மகனாகப் பிறந்தார்.