தந்தை பெரியார் நினைவகம், வைக்கம், கோட்டயம் மாவட்டம்

கேரள மாநிலம்

வணக்கம்!

பகுத்தறிவுப் பகலவன்' சுயமரியாதைச் சுடர், சமூக நீதிக்கான சரித்திரச் சான்றாய் விளங்கிடும் தந்தை பெரியார் அவர்கள் ஈரோடு மாவட்டம் வெங்கட்ட நாயக்கர் - சின்னத்தாயம்மாள் இணையர்க்கு 17.09.1879 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.

சாதியப் பாகுபாட்டினைக் காணச் சகிக்காமல், சமூக நீதி காத்திட சளைக்காமல் சாகும் வரையில் போராடியவர். மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதே அடிப்படைக் கொள்கைகளாகவும், சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு இவற்றையே இலக்காகத் தன் வாழ்நாளின் இறுதிவரை உறுதியாகக் கொண்டவர்.

1924இல் கேரளா வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராகப் போராடி 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டார். எஃகு போன்ற மனஉறுதியும், அஞ்சாமை என்னும் ஆயுதம் ஏந்திப் போர்க்குணத்துடன் போராட்டத்தில் களம் கண்டு வெற்றிவாகை சூடியவர். சமூகநீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு இன்று இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாய்த் திகழ்வதற்கு அடித்தளமிட்டுத் தனது இறுதி மூச்சு இருந்தவரை சுயமரியாதைக் கொள்கைகளுக்காகவே வாழ்ந்த தந்தை பெரியார் அவர்கள் 24.12.1973இல் இயற்கை எய்தினார்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்துப் போராடிய இடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவாகத் அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் 27.06.2012 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அவர் வாழ்ந்த வீடும் தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர்த் திங்கள் 17ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்படுவதோடு, அந்நாள் 'சமூகநீதி நாள்' ஆகவும் கடைப்பிடிக்கப்பட்டு அரசு அலுவலகங்களில் உறுதிமொழியும் ஏற்கப்படுகிறது.

நன்றி! வணக்கம்.

தந்தை பெரியார் நினைவகம், வைக்கம், கோட்டயம் மாவட்டம்

பகுத்தறிவுப் பகலவன்' சுயமரியாதைச் சுடர், சமூக நீதிக்கான சரித்திரச் சான்றாய் விளங்கிடும் தந்தை பெரியார் அவர்கள் ஈரோடு மாவட்டம் வெங்கட்ட நாயக்கர் - சின்னத்தாயம்மாள் இணையர்க்கு 17.09.1879 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.