தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா நினைவகம்

ஈரோடு

வணக்கம்!

'பகுத்தறிவுப் பகலவன்' சுயமரியாதைச் சுடர், சமூக நீதிக்கான சரித்திரச் சான்றாய் விளங்கிடும் தந்தை பெரியார் அவர்கள் ஈரோடு மாவட்டம் வெங்கட்ட நாயக்கர் - சின்னதாயம்மாள் இணையர்க்கு 17.09.1879 அன்று மகனாகப் பிறந்தார்.

சாதியப் பாகுபாட்டினைக் காணச் சகிக்காமல், சமூக நீதி காத்திட சளைக்காமல் சாகும் வரையில் போராடியவர். மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதே அடிப்படைக் கொள்கைகளாகவும், சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு இவற்றையே இலக்காகத் தன் வாழ்நாளின் இறுதிவரை உறுதியாகக் கொண்டவர்.

1924இல் கேரள வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராகப் போராடி 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்பட்டார். எஃகு போன்ற மனஉறுதியும், அஞ்சாமை எனும் ஆயுதம் ஏந்தி, போர்க்குணத்துடன் போராட்டத்தில் களம் கண்டு வெற்றிவாகை சூடியவர். சமூகநீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு இன்று இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாய்த் திகழ்வதற்கு அடித்தளமிட்டுத் தனது இறுதி மூச்சு உள்ளவரை சுயமரியாதைக் கொள்கைகளுக்காகவே வாழ்ந்த தந்தை பெரியார் அவர்கள் 24.12.1973இல் இயற்கை எய்தினார்.

தமிழ் இனத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்டவர். 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு, சுயமரியாதை, பகுத்தறிவு, சமதருமம், சமூக நீதி, இன உரிமை ஆகிய அடிப்படை கொள்கைகளால் 143 ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம்மோடும். இனிவரும் இளம்தலைமுறையினரோடும் காலம் கடந்து வாழும் தந்தை பெரியார் அவர்களின் நினைவாக, ஈரோடு மாவட்டத்தில் அவர் வாழ்ந்த வீடு தமிழ்நாடு அரசால் தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தந்தை பெரியாருக்கு பெருமைச் சேர்க்கின்ற வகையில் 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் வாங்கப்பட்ட கப்பலுக்கு எம்.வி. தமிழ்ப் பெரியார் என்று பெயர் சூட்டல், நூற்றாண்டு விழா சிறப்புடன் கொண்டாட்டம், அஞ்சல்தலை வெளியீடு, ஆண்டுதோறும் சமூகநீதிக்காகப் பாடுபடுவோருக்கு 'பெரியார் விருது' வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுவதோடு, அந்நாள் 'சமூகநீதி நாள்' ஆகவும் கடைப்பிடிக்கப்பட்டு அரசு அலுவலகங்களில் உறுதிமொழியும் ஏற்கப்படுகிறது.

நன்றி! வணக்கம்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா நினைவகம்

'பகுத்தறிவுப் பகலவன்' சுயமரியாதைச் சுடர், சமூக நீதிக்கான சரித்திரச் சான்றாய் விளங்கிடும் தந்தை பெரியார் அவர்கள் ஈரோடு மாவட்டம் வெங்கட்ட நாயக்கர் - சின்னதாயம்மாள் இணையர்க்கு 17.09.1879 அன்று மகனாகப் பிறந்தார்.