மாவீரன் பூலித்தேவன் நினைவு மாளிகை
நெற்கட்டும்செவ்வல் கிராமம்
வணக்கம்!
ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் துணிவுடன் எதிர்த்துப் போரிட்ட மாவீரன் பூலித்தேவன் 1715ஆம் ஆண்டு சித்திர புத்திரத்தேவர் - சிவஞான நாச்சியார் இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.
ஆங்கிலேயர்க்குக் கப்பம் கட்ட மறுத்ததோடு, கொஞ்சம் நெல்லாவது கொடுங்கள் என்று துபாஷ் கேட்டபோது, வரி என்னும் பெயரால் ஒரு நெல்மணியைக்கூட கட்டமாட்டேன் என்று வீரமுடன் கர்ஜித்த மன்னர் பூலித்தேவனை 'நெற்கட்டான்செவ்வல்' என்று மக்களால் அழைக்கப்பட்டார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பூலித்தேவன் நடத்திய விடுதலைப் போர் ஒரு மாதப் போரல்ல, ஓராண்டுப் போரல்ல. 1750 முதல் 1767 வரையில் ஏறத்தாழ 17 ஆண்டுகள் தொடர்ந்து பல போரை நடத்தி இந்திய விடுதலைப் போர்ச் சரித்திரத்தில் எந்தப் பாளையக்காரரும் செய்யாத சாதனையை நிகழ்த்திச் சரித்திரம் படைத்தவர் பூலித்தேவர் ஆவார். போரிலே வெல்லமுடியாத கும்பினியர்கள் சூழ்ச்சி மூலம் வென்றிடும் திட்டமும் தோல்வியானது.
1806ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர்ப் புரட்சிக்கும், 1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்க் கலகத்திற்கும் முன்பே, மாவீரன் பூலித்தேவன் விடுதலைப் போரை நடத்தியதால் இதுவே முதல் முழக்கமாகக் கருதப்படுகிறது.
அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டும் செவ்வலில் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் நினைவு மாளிகை 28.12.1998 அன்று திறந்து வைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த செப்டம்பர்த் திங்கள் 1ஆம் நாளை (ஆவணித் திங்கள் 16ஆம் நாள்) அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.