மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம்
தொரப்பள்ளி
வணக்கம்!
மூதறிஞர் இராஜாஜி அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், தொரப்பள்ளி கிராமத்தில் நல்லான் சக்கரவர்த்தி ஐயங்கார் - சிங்காரம் அம்மாள் இணையர்க்கு மகனாக 10.12.1878 அன்று பிறந்தார்.
ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் இந்திய அரசியல் வரலாற்றில் விடுதலைப் போராட்ட வீரராகவும், அண்ணல் காந்தியடிகள்,மகாகவி சுப்பிரமணியபாரயார், திலகர், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் வரிசையில் தமிழாராய் இடம் பெற்றவர் மூதறிஞர் இராஜாஜி ஆவார். தன் வாழ்நாளின் இறுதிவரை மதச்சார்பின்மையைப் பெரிதும் கடைப்பிடித்ததால், சர்தார் வல்லபபாய் படேல் அவர்களால் 'அரை முஸ்லீம்' என்றும், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் 'மூதறிஞர் இராஜாஜி' என்று பெருமிதத்தோடும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 'அன்பால் அறிவால் ஆற்றலால் எங்களின் இதயம் கவர்ந்த மூதறிஞர்' என்றும் போற்றப்பட்டவர்.
தமிழகத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை முன்னின்று நடத்தியவர். அன்றைய மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர். தமிழ்நாடு முதலமைச்சர் என நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் தன் ஆளுமையை உறுதி செய்தவர். மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கலப்புத் திருமணம் ஆகிய திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தியவர். எளிமையின் சின்னமாக விளங்கியவர். இலக்கியத்தில் அரிய பல நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் தந்தவர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். தலைசிறந்த நிருவாகத் திறமைக்குச் சான்றாக நாட்டின் உயரிய விருதான 'பாரதரத்னா விருது' வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
அன்னாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், 1978ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் தொரப்பள்ளியில் உள்ள அன்னாரின் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில் 1973ஆம் ஆண்டு அஞ்சல் தலையும், 1975ஆம் ஆண்டு காந்தி மண்டப வளாகத்தில் இராஜாஜி நினைவாலயம் மற்றும் நூலகமும் திறந்து வைக்கப்பட்டன. மேலும், 1978ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் அருகில் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. அன்னாரின் பிறந்த திசம்பர் திங்கள் 10ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.