நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு இல்லம்

நாமக்கல்

வணக்கம்!

'தேசியக் கவிஞர்' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் சேலம் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன் பிள்ளை - அம்மணியம்மாள் இணையர்க்கு மகனாக 19.10.1888 அன்று பிறந்தார்.

இளம் வயதிலேயே மிகுந்த தேசப்பக்தியும் ஓவியங்கள் வரைவதிலும், கவிதைகளைப் புனைவதிலும் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். அரசுப்பணியில் எழுத்தாளாராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கித் தணலான விடுதலை வேட்கையினைத் தனது நெஞ்சிலே என்றும் ஏந்தியிருந்ததால், பாட்டுடைத் தலைவன் பாரதிக்குப்பின் தமிழகத்தில் தமது கவிதைகளாலும், தியாகங்களாலும் உரமூட்டி வளர்த்த சொல்லேருழவர் நாமக்கல் கவிஞர் என்றால் அது மிகையில்லை.

'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது', 'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு', 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' எனத் தனது தனித்தமிழ்ப் புலமைக் கவிதைகளால் நாட்டு மக்களிடையே விடுதலை உணர்வினை மங்கிடாமல் பொங்கச் செய்தவர். அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, உப்புச் சத்தியாக் கிரகம் உள்ளிட்ட பல்வேறு அறப்போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைவாசம் கண்டவர். பெரும்புலவன் பாரதியால் புலவன் என்று போற்றப்பட்டவர்.

1949இல் அரசவைக் கவிஞர், 1956, 1962ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், 1971இல் 'பத்மபூஷன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இவர் 24.08.1972 அன்று இயற்கை எய்தினார்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் 21.01.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும் 1989ஆம் ஆண்டு அன்னாரின் நூற்றாண்டு சிறப்புடன் கொண்டாடப்பட்டு, அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டு, சென்னைத் தலைமைச் செயலக 10 மாடி அடுக்ககத்திற்கு 'நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் மாளிகை' என்று பெயர் சூட்டிப் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த அக்டோபர்த் திங்கள் 10ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு இல்லம்

'தேசியக் கவிஞர்' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் சேலம் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன் பிள்ளை - அம்மணியம்மாள் இணையர்க்கு மகனாக 19.10.1888 அன்று பிறந்தார்.