தியாகி பி.சீனிவாசராவ் நினைவு மண்டபம்

திருத்துறைப்பூண்டி

வணக்கம்!

விவசாயப் பெருங்குடிகளின் விடிவெள்ளி, பொதுவுடைமை ஒளிச்சுடராம் தியாகி பி.சீனிவாச ராவ் அவர்கள் அன்றைய சென்னை மாகாணத்தின் தென்கன்னட படகராவில் 10.04.1907 அன்று பிறந்தார்.

சிறுவயது முதற்கொண்டே அந்நிய ஏகாதிபத்தியத்தின் அடிமைத்தனத்திற்கு ஆட்பட்ட மக்களின் அல்லல்களைக் கண்டு துடித்துப் பட்டப்படிப்பினைப் பாதியிலேயே துறந்து விடுதலை வேட்கையில் தீவிரமானார். அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு, ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாக்கிரகம், சுதேசி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அறப்போராட்டங்களில் தன்னை ஆட்படுத்திக் கொண்டார்.

அன்றைய தஞ்சை மாவட்ட விவசாய மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு காவல்துறையின் கடுமையான தண்டனைகளைப் பெற்றவர். பி.எஸ்.ஆர். என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அந்த மூன்றெழுத்துக்கு ஆங்கிலேய ஏகாதிப்பத்தியம் மட்டுமின்றி, நிலவுடைமையாளர்களும், பெரும் பண்ணையாளர்களும் அஞ்சி நடுங்கினர். சிறைக் காலத்தில் நேதாஜியின் நட்பைப் பெற்றுக் காலப்போக்கில் பொதுவுடைமைக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு 1936இல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையைத் தமிழகத்தில் உருவாக்கினார். தோழர் ஜீவாவுடன் இணைந்து ஜனசக்தி நாளிதழில் பணியாற்றினார். உழைப்பாளர்களின் வாழ்வில் முன்னேற்றம் காணப் பல்வேறு தொடர் மாநாடுகளையும் நடத்தி 1943ஆம் ஆண்டு அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து 'கிசான்' விவசாய சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்று மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்தார்.

பண்ணையடிமைகளாய், சாணிப்பால், சவுக்கடிக்குட்பட்ட விவசாயக் கூலிகளான தலித் சமூகத்தை மீட்டெடுத்து, இயக்கம் கூட்டி, போராடிக் கீழத் தஞ்சை மாவட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுத்துத் தனது இறுதிக் காலம் வரை உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காகப் போராடினார்.

29.09.1961 அன்று பி.எஸ்.ஆர். நிலச்சீர்திருத்தம் குறித்த விவசாயக் கூலிகளின் தீரமிக்க போராட்டத்தில் பங்கேற்றபோது இயற்கை எய்தினார். அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு அரசின் சார்பில், தியாகி சீனிவாசராவ் அவர்களின் நினைவு மண்டபம் 14.11.2009 அன்று திறந்து வைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 10ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

தியாகி பி.சீனிவாசராவ் நினைவு மண்டபம்

விவசாயப் பெருங்குடிகளின் விடிவெள்ளி, பொதுவுடைமை ஒளிச்சுடராம் தியாகி பி.சீனிவாச ராவ் அவர்கள் அன்றைய சென்னை மாகாணத்தின் தென்கன்னட படகராவில் 10.04.1907 அன்று பிறந்தார்.