வ.வே.சுப்பிரமணிய ஐயர் நினைவு இல்லம்
வரகனேரி
வணக்கம்!
பன்மொழி வித்தகர், படைப்பிலக்கிய முன்னோடி, வீரமிக்க விடுதலைப் போராளி என்று அழைக்கப்பட்ட வ.வே.சு.ஐயர் அவர்கள் 02.04.1881 அன்று வேங்கடேச ஐயர் காமாட்சி இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.
படிப்பிலும் இலக்கியப் படைப்பிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு, சட்டம் பயின்று வழக்குரைஞராகத் தனது பணியினைத் தொடங்கினார். இளமைக் காலங்களில் உலக நாடுகளின்பால் பரந்துபட்ட ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால், கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஆழ்ந்த புலமையும் பெற்றார்.
1907ஆம் ஆண்டு தம் 26ஆம் வயதில் பாரீஸ்டராவதற்கு இலண்டன் சென்று சில மாதங்களில் புரட்சியாளராக மாறியவர். விடுதலைப் போரில் இளைஞர்களின் பங்களிப்பினை உறுதி செய்ததில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டார். இலண்டனில் புரட்சி வீரர் தாமோதர சாவர்க்கரின் வலது கரமாகச் செயல்பட்டார். பின்னர்க் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அறவழிப் போரட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
அரசியல் பணிகளுக்கிடையேயும், அயராத தனது எழுத்திலக்கியப் பணிகைைளத் தொய்வின்றித் தொடர்ந்தார். இந்தியா நாளிதழில் அவர் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள், தருமம், தேசபக்தன், பாலபாரதி ஆகிய பத்திரிகைகளின் வாயிலாக எழுதி, விடுதலை வேட்கையை இளைஞர்களிடம் ஊட்டி வளர்த்தார்.
திருக்குறள், கம்பராமாயணக் கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மங்கையர்க்கரசியின் காதலன், தன்னம்பிக்கை, புக்கர், வாஷிங்டன், சந்திரகுப்த சக்கரவர்த்தி, குரு கோவிந்த சிங்கர் போன்ற சிறுகதைகள் எழுதியுள்ளார்.
1925ஆம் ஆண்டு சூன் திங்கள் 3ஆம் நாள் தனது 44ஆம் வயதில் அகால மரணத்தைத் தழுவினார். அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், வரகனேரி அக்ரகாரத்தில் வ.வே.சுப்பிரமணிய ஐயர் வாழ்ந்த வீடு அரசுடைமையாக்கப்பட்டு 05.05.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த ஏப்ரல் திங்கள் 2ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.