தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் நினைவு இல்லம்

உத்தமதானபுரம்

வணக்கம்!

தமிழ்மொழிக்கு அருந்தொண்டாற்றி, அழிவின் நிலையிலிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தனது அர்ப்பணிப்புடன் கூடிய அயராத உழைப்பால் நமக்குத் தந்தருளி, தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் தமிழ்த் தாத்தாவாக நிலைத்துள்ள உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற சிறு கிராமத்தில் வேங்கட சுப்பையர் சரசுவதி இணையர்க்கு 19.02.1855 அன்று மகனாகப் பிறந்தார்.

விலைமதிப்பற்ற நம் தமிழ் இலக்கியங்கள் கால ஓட்டத்தில் கரைந்து போகாமலும், கறையான் அரிப்புக்கும், தீயின் செந்நாக்குக்கும் இரையாகாமல் கட்டிக்காத்து நம் கைகளில் தவழ்ந்திடச் செய்ததில் தமிழ்த்தாத்தாவின் பங்கு மகத்தானது; மாசற்றது என்றால் அது மிகையில்லை.

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் நல்ல தமிழ் பயின்று, கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராய்ப் பணியாற்றிய காலத்தில்தான் பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடித் தளரா முயற்சியில் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். அதன் பயனாகப் பழந்தமிழ்க் காவியங்கள், காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு 3000-க்கும் மேற்பட்ட ஏட்டுச் சுவடிகளையும், கையெழுத்து ஏடுகளையும் சேகரித்துத் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.

27.03.1937 அன்று சென்னை திருவல்லிகேணியில் நடைபெற்ற இந்திய இலக்கியத் தமிழ் மாநாட்டில் பங்கேற்ற அண்ணல் காந்தியடிகள் 'தங்கள் திருவடியின் கீழ் அமர்ந்து தமிழ் கற்க வேண்டும் என்கிற ஆசை என்னுள் எழுகிறது' என்று உணர்ச்சிப் பெருக்கோடு குறிப்பிட்டார். தமிழ்த்தாத்தா அவர்களின் அளப்பரிய தமிழ்த்தொண்டினைத் தமிழ் பயின்ற வெளிநாட்டு அறிஞர்களான சூலியன் வின்சோன், ஜி.யு.போப் போன்றவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

தமிழாய் வாழ்ந்து, தமிழாய் உயர்ந்து, தமிழர்களின் உள்ளங்களில் தமிழாய் நிலைத்திட்ட தமிழ்ப்பிதா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் தமிழ்த்தொண்டு தமிழ்கூறும் நல்லுலகம் உள்ளவரை தமிழாய் நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

'தமிழ்த்தாத்தா' எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் 1942 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அன்னாரின் நினைவினைப் போற்றுகின்ற வகையில், 2006ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் உ.வே.சா.அவர்கள் வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசினால் நினைவில்லமாக மாற்றப்பட்டு 27.04.2008 அன்று திறந்து வைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த பிப்ரவரித் திங்கள் 19ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.