தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம்

தில்லையாடி

வணக்கம்!

தனது 16ஆவது வயதிலேயே ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடி உயிர்நீத்த 'முதல் விடுதலைப் போராளி', தமிழ்ப்பெண்ணாம் வள்ளியம்மை மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி முனுசாமி முதலியார்- மங்களத்தம்மாள் இணையர்க்கு தென்னாப்பிரிக்காவில் 22.2.1898 அன்று மகளாகப் பிறந்தார்.

தென்னாப்பிரிக்காவில் காலனி அரசுப் பெண்கள் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் பள்ளிகளில் நடத்தப்பட்ட நிறவெறி கண்டு மனம் வெதும்பி பதுங்கிடாமல், இந்நிறவெறியினை எதிர்த்துப் போராடத் துணிந்தார். அம்மண்ணிலே இந்தியர்கள் அனைவரும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டு வெகுண்ட அண்ணல் காந்தியடிகள் 1913ஆம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க்கில் நடத்திய அறப்போரில் தன்னையும் இணைத்துக் கொண்டபோது அவருக்கு வயது பதினாறு. இதன் பரிசாய் மூன்று மாதக் கடுங்காவல் சிறைத் தண்டனையை ஏற்று, 'அபராதம் செலுத்தி விடுதலையில் செல்' என்றுரைத்த சிறை அதிகாரியிடம் 'அது சத்தியாக்கிரகப் போராளிக்கு இழுக்கு, செத்தாலும் சிறையிலேயே சாவேன் அரசு விதித்த அபராதத் தொகையைக் கட்ட மாட்டேன்' என்று சிங்கமெனக் கர்ஜித்துத் தன் விடுதலை உணர்வினை வெளிப்படுத்திய வீரமங்கை வள்ளியம்மை கடும் நோயினால் பாதிக்கப்பட்டு, தண்டனைக் காலம் முடியும் முன்பே 1914 பிப்ரவரி 11ஆம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அடுத்த பத்து நாள்களில் தான் பிறந்த நாளிலேயே (22.2.1914) அன்று இயற்கை எய்தினார்.

வீரமங்கை வள்ளியம்மை நல்லடக்கம் செய்யப்பட்ட ஜோகன்ஸ்பர்க்கில் அஞ்சலி செலுத்திய அண்ணல் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வள்ளியம்மையின் நினைவுச் சின்னம் 15.07.1914 அன்று திறந்து வைத்துப் பின்னர் 01.05.1915 அன்று தில்லையாடிக்கு வருகை தந்து வள்ளியம்மையின் தியாகத்தை எண்ணி அங்கிருந்த மண்ணை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டார். 'பலன் ஏதும் கருதாமல், தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மையே எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வினை ஊட்டிய பெருமைக்குரியவர்' என்று குறிப்பிட்டார்.

தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் பெருமைகளைப் போற்றுகின்ற வகையில், தில்லையாடியில் காந்தி நினைவுத் தூணும், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி, தில்லையாடி கிராமத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் நினைவு மண்டபம் 13.08.1971 அன்று திறந்து வைக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு அஞ்சல் தலையும், எழும்பூர் அரசுக் கைத்தறி விற்பனை மைய வளாகத்திற்குத் 'தில்லையாடி வள்ளியம்மை மாளிகை' எனப் பெயர் சூட்டப்பட்டது. அண்ணல் காந்தியடிகளின் கனவினை நிறைவேற்றுகின்ற வகையில், ஜோகன்ஸ்பர்க்கில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள வீரப்பெண் வள்ளியம்மை கல்லறை 1997 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு நெல்சல் மண்டேலா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரது பிறந்த பிப்ரவரித் திங்கள் 22ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி! வணக்கம்.

தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம்

தனது 16ஆவது வயதிலேயே ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடி உயிர்நீத்த 'முதல் விடுதலைப் போராளி', தமிழ்ப்பெண்ணாம் வள்ளியம்மை மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி முனுசாமி முதலியார்- மங்களத்தம்மாள் இணையர்க்கு தென்னாப்பிரிக்காவில் 22.2.1898 அன்று மகளாகப் பிறந்தார்.