தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம்
திருமங்கலம்
வணக்கம்!
தியாகி விஸ்வநாததாஸ் அவர்கள் சிவகாசியைச் சேர்ந்த சுப்பிரமணிய பண்டிதர், ஞானம்மாள் இணையர்க்கு 16.06.1886 அன்று மகனாகப் பிறந்தார்.
சிறுவயது முதற்கொண்டே தேசபக்திப் பாடல்களைப் பாடுவதிலும், விடுதலை வேட்கையை மக்களிடம் எடுத்துரைக்கின்ற வகையில் தெருக்கூத்துகளையும், நாடகங்களை நடத்துவதிலும், நடிப்பதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தியாகி விஸ்வநாததாஸ் ஆவார். அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த பின் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவரால் தூண்டப்பட்டு, நாடு முழுவதும் பயணித்து தேசபக்திப் பாடல்களைப் பாடியும் நாடகங்களையும் நடத்தி வந்தார். உணர்ச்சிமிகுந்த இவரது பாடல்களைக் கேட்டு எரிச்சலுற்ற ஆங்கிலேய அரசு இவரை 29 முறை கைது செய்து சிறையில் அடைத்தது. வறுமையின் கொடுமையில் வாடியபோதும் தன் தேசப் பணியை விடாது தொடர்ந்தார்.
பாவேந்தர் பாரதிதாசனால் பாடும் பேறுபெற்ற இவர் தேசப் பக்த செம்மல்களாம் வ.உ.சிதம்பரனார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மூதறிஞர் இராஜாஜி, தோழர் ஜீவானந்தம் ஆகியோருடன் நெருங்கிய நட்புக் கொண்டவர்.
தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் நம் தாய் நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்த அரிய கலைஞராம் தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் தியாகத்திற்கு பெருமைச் சேர்க்கின்ற வகையில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அவர் வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசின் சார்பில், நினைவில்லமாக 27.12.1998 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த சூன் திங்கள் 16ஆம் நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நன்றி! வணக்கம்.