தீரன் சின்னமலை நினைவுச் சின்னம்
சங்ககிரி, சேலம்
வணக்கம்!
விடுதலைப் போராட்ட வீரரும், வெள்ளையரைப் போரில் புறமுதுகிட்டு ஓடச் செய்தவருமான தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டம். காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்கிற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் - பெரியாத்தா இணையர்க்கு 17.04.1756 அன்று மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் தீர்த்தகிரி ஆகும்.
தனது இளம் வயது தொட்டே அன்னியரின் அடிமைத் தனத்தினைக் கண்டு வெகுண்ட தீர்த்தகிரி அவர்கள் மைசூர் அரசுக்குக் கொண்டு செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குக் கொடுத்தார். அங்கிருந்த தண்டல்காரரிடம் 'சென்னிமலைக்கும், சிவன் மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்' என்று வீர உணர்ச்சியோடு எச்சரித்து அனுப்பினார். அன்று முதல் 'சின்னமலை' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
கிழக்கிந்திய கம்பெனிப் படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்திடத் தொடர்ந்து போரிட்டு 1801ஆம் ஆண்டு ஈரோடு காவிரிக் கரையிலும், 1802ஆம் ஆண்டு ஓடாநிலையிலும், 1804ஆம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயருடன் நடைபெற்ற போர்களில் தீரன் சின்னமலை அவர்கள் பெரும் வெற்றி பெற்றார்.
போர்ப் பயிற்சியில் சிறந்து விளங்கினாலும், திருக்கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டிப் புலவர் பெருமக்களைப் பெரிதும் ஆதரித்தார். சமூக ஒற்றுமை சின்னமலை அவர்களிடம் மேலோங்கி நின்றது.
போரில் தீரன் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை நன்குணர்ந்த ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து. போலி விசாரணை நடத்தி 1805ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 31 அன்று சங்ககிரிக் கோட்டையில் தூக்கில் இடப்பட்டார்.
அன்னாரின் நினைவினைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு மாவட்டம் அரசலுர் ஓடாநிலையில் மணிமண்டபம் 1.3.2006 அன்றும், சேலம் மாவட்டம் சங்ககிரியில் நினைவுத் தூண் 23.12.2013 அன்றும் திறந்து வைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் அன்னாரின் பிறந்த ஏப்ரல் 17ஆம் நாளை அரசு விழாவாகவும், ஆடி 18ஆம் நாளை நினைவு நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
நன்றி! வணக்கம்.